வாஷிங்டன்: ஈரானிடம் அணுஆயுதம் உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிவந்த நிலையில், அந்நாடு அணுகுண்டு தயாரித்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என சர்வதேச அணுசக்தி முகமையின் இயக்குநர் ஜெனரல் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அந்த முகமையின் இயக்குநர் ஜெனரல் ரபேல் குரோஸி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்து எனது அறிக்கையில் நான் தெளிவாக உள்ளேன். ஈரான் அணுகுண்டு தயாரித்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. ஆனால், அதற்கு தேவையான செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அதிகளவு வைத்து இருந்தது. அணுசக்தி திட்டங்களை ஆய்வு செய்வதற்கு போதுமான ஒத்துழைப்பை ஈரான் வழங்கவில்லை. இது கவலையளிக்கும் விஷயம். பிரச்னைகளை தீர்க்க பன்னாட்டு அணுசக்தி முகமைக்கு அந்நாடு உதவாத வரை ஈரானின் அணுசக்தி திட்டம் அமைதிக்கானது என்பதை உறுதி செய்ய முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஈரான் மீது தாக்குதலை துவக்கிய பிறகு அதிபர் டிரம்ப் கூறுகையில்,‘ இந்த தாக்குதலை அமெரிக்கா துவக்கி இருக்காவிட்டால், ஈரான் அணு ஆயுதப்போரை துவக்கியிருக்கும். பல நாடுகளை தாக்கியிருக்கும். அவர்கள் மனரீதியில் சரியில்லாதவர்கள். கோபத்தில் இருக்கிறார்கள். அவர்களிடம் அணு ஆயுதம் இருந்தால் அதனை பயன்படுத்துவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்க் ரூபியோ கூறுகையில், ஈரானை மத அடிப்படைவாதிகள் வழிநடத்துகின்றனர். அணு ஆயுதம் தான் அவர்களின் நோக்கம். ஏவுகணை மற்றும் டிரோன் எனக்கூறிக்கொண்டு அணு ஆயுதங்களை தயாரிக்கின்றனர். மத அடிப்படைவாதிகள் கைகளில் அணுஆயுதம் கிடைக்காத வரை உலகம் அமைதியாக இருக்கும் எனத் தெரிவித்து இருந்தார்.
ஆனால், இதற்கு நேர்மாறாக சர்வதேச அணுசக்தி முகமையின் இயக்குநர் ஜெனரல், ஈரான் அணுகுண்டு தயாரித்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
