ஈரான் அணுசக்தி மையம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்

டெஹ்ரான்: மேற்காசிய பிராந்தியத்தில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரானில் உள்ள அணுசக்தி செறிவூட்டல் மையம் மீது, இஸ்ரேல் நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது.

மேற்காசிய நாடான ஈரான் மீது, அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இத்தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவராக இருந்த கமேனி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானும் தாக்குதல் நடத்துவதால் மேற்காசிய பிராந்தியத்தில் போர் பதற்றம் நீடிக்கிறது. இந்த போர் நான்காவது வாரத்தை எட்டி உள்ளது.

இந்நிலையில் நேற்று, ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்கு தென்கிழக்கே, 220 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள முக்கிய அணுசக்தி செறிவூட்டல் தளமான, ‘நாடன்ஸ்’ மீது இஸ்ரேல் படைகள் வான்வழி தாக்குதல் நடத்தின. போரின் துவக்கத்திலேயே இந்த மையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தற்போது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மேற்காசிய பிராந்தியத்தில் ராணுவ நடவடிக்கைகளை குறைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிய மறுநாளே இத்தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இந்த அணுசக்தி மையம், கடந்தாண்டு ஜூனில், இஸ்ரேல் – ஈரான் இடையே நடந்த, 12 நாட்கள் போரிலும் தாக்கப்பட்டது.

ராணுவ நடவடிக்கையை குறைப்பது குறித்து பரிசீலிப்பதாக அமெரிக்கா தெரிவித்தாலும், மேலும் மூன்று போர்க்கப்பல்களையும், 2,500 கடற்படை வீரர்களையும் மேற்காசிய பிராந்தியத்துக்கு அனுப்பியுள்ளது. மூன்று வாரங்களை கடந்தும் இப்போர் முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.

இஸ்ரேல் மீது தொடர்ந்து ஏவுகணைகளை வீசி ஈரான் நேற்று தாக்குதல் நடத்தியது. ”ஈரான் மீதான தாக்குதல்கள் வரும் வாரத்தில் அதிகரிக்கப்படும்,” என, இஸ்ரேல் ராணுவ அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, தங்கள் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள முக்கிய எண்ணெய் ஆலைகளை நோக்கி வந்த, 20 ஆளில்லா சிறிய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.

நெருங்கி விட்டோம்! மேற்காசிய பிராந்தியத்தில் எங்களின் ராணுவ நடவடிக்கை குறைந்து வருகிறது. இதை வைத்து பார்த்தால், நாங்கள் வெற்றியை மிகவும் நெருங்கி விட்டோம் என்றே அர்த்தம். டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபர்

நாடன்ஸ் அணுசக்தி மையத்தில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதல் குறித்து, ஈரான் தகவல் தெரிவித்துள்ளதாக சர்வதேச அணுசக்தி கழகம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஆராய்ந்து வருவதாகவும், நாடன்ஸ் தளத்திற்கு வெளியே கதிரியக்க அளவு அதிகரிப்பு எதுவும் பதிவாகவில்லை என்றும் அணுசக்தி கழகம் தெரிவித்துள்ளது.

Source link