மேற்கு ஆசியாவில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே தீவிரமடைந்து வரும் போர் நடவடிக்கைகளால், கடல் வழி போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, பாரசீக வளைகுடா பகுதியில் சுமார் 23,000 இந்திய மாலுமிகள் சிக்கித் தவிப்பதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களைத் தொடர்ந்து, உலகின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் விநியோகத்தில் 20 சதவீதத்தைக் கையாளும் முக்கிய வழித்தடமான ‘ஹார்முஸ் ஜலசந்தி’யை ஈரான் தற்போது முடக்கியுள்ளது.சரக்கு கப்பல்மார்ச் 5-ம் தேதி நிலவரப்படி, இந்தியக் கொடி ஏந்திய 36 கப்பல்கள் இந்தப் பகுதியில் சிக்கியுள்ளன. இதில் 7 கப்பல்கள் அரசுக்குச் சொந்தமான இந்தியக் கப்பல் கழகத்தைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நெருக்கடியைச் சமாளிக்க இந்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஆபத்தான பகுதிகளில் உள்ள இந்தியக் கப்பல்களைக் கண்காணிக்கும் கால இடைவெளியை, ஒவ்வொரு 6 மணி நேரத்திலிருந்து தற்போது ஒவ்வொரு ஒரு மணி நேரமாக அதிகரித்துள்ளது. சிக்கியுள்ள கப்பல் ஊழியர்களுடன் அதிகாரிகள் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர்.
36 இந்திய கப்பல்களில் 1,074 பணியாளர்கள் பாரசீக வளைகுடாவின் நேரடிப் பாதிப்புப் பகுதியில் உள்ளனர். இதில் 24 கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்திக்கு மேற்கேயும், 12 கப்பல்கள் ஓமன் வளைகுடாப் பகுதியிலும் நிறுத்தப்பட்டுள்ளன. ஏடன் வளைகுடாவில் 2 இந்தியக் கப்பல்கள் பயணம் செய்கின்றன. அதே சமயம், மிகவும் பதற்றமான செங்கடல் பகுதியில் தற்போது இந்தியக் கப்பல்கள் எதுவும் இயக்கப்படவில்லை.ஈரான் போர்க்கப்பல்இந்தக் கப்பல்கள் பெரும்பாலும் கச்சா எண்ணெய், திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (LPG) மற்றும் முக்கிய வணிகப் பொருட்களை ஏற்றிச் செல்பவை. இந்த முடக்கத்தால் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் இறக்குமதி செலவுகள் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. மாலுமிகளின் குடும்பத்தினர் கவலையடைந்துள்ள நிலையில், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வெளியுறவுத் துறை அமைச்சகமும், கப்பல் போக்குவரத்து அமைச்சகமும் இணைந்து செயல்பட்டு வருகின்றன.
