டெஹ்ரான்: ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், அந்நாட்டின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டதையடுத்து, அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரான் பதில் தாக்குதல் நடத்தியது. இதைத்தொடர்ந்து, இரண்டாவது நாளாக நேற்றும் இரு தரப்பும் தாக்குதல்களை தொடர்ந்ததால், மேற்காசிய நாடுகள் பலத்த சேதத்தை சந்தித்துள்ளன.
மேற்காசிய நாடான ஈரான் – அமெரிக்கா இடையே கடந்த 2015ம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் பயனற்றது என கூறி, தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தன் முதல் பதவி காலத்தின் போது, 2018ல் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறினார்.
இந்நிலையில், தற்போது இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்ற பின், அணுசக்தி ஒப்பந்தத்தை மீண்டும் ஈரானுடன் ஏற்படுத்துவதற்கான முயற்சியில் டிரம்ப் ஈடுபட்டார். இதற்கான மறைமுக பேச்சு, மேற்காசிய நாடான ஓமன் மத்தியஸ்தத்துடன், கடந்த மாதம் மூன்று கட்டங்களாக நடந்தது.
இதில், அமெரிக்கா கடும் நிபந்தனைகளை ஈரானுக்கு விதித்தது. இதை ஏற்க மறுத்ததையடுத்து, நேற்று முன்தினம் மற்றொரு மேற்காசிய நாடான இஸ்ரேலுடன் இணைந்து, ஈரான் மீது அமெரிக்கா அதிரடி தாக்குதல் தொடுத்தது. இத்தாக்குதலில், ஈரானின் தலைநகர் டெஹ்ரான் மற்றும் அணுசக்தி மையங்கள் உள்ள நகரங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின.
ஈரானும் பதிலுக்கு இஸ்ரேல் மீதும், மேற்காசிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீதும், ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது.
அமெரிக்கா நடத்திய தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவர் கமேனியின் இல்லம் மற்றும் அலுவலகம் கடுமையாக பாதிப்புக்குள்ளானது. இதில், ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டார். இது, உலகம் முழுதும் உள்ள அவரது ஆதரவாளர்களையும், முஸ்லிம்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், ஈரானிய புரட்சிகர காவல்படை, இதுவரை இல்லாத அளவுக்கு இஸ்ரேல் மற்றும் மேற்காசிய நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை குறிவைத்து, தாக்குதலை தீவிரப்படுத்தப் போவதாக அறிவித்தது.
இதன்படி, ஈரானில் இருந்து நுாற்றுக்கணக்கான ஏவுகணைகள் இஸ்ரேலின் முக்கிய நகரங்களையும், பஹ்ரைன், குவைத் மற்றும் கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களையும் குறி வைத்து ஏவப்பட்டன. இத்தாக்குதலில், இஸ்ரேலின் டெல் அவிவ் பகுதியில் ஒரு பெண் உயிரிழந்தார். ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபியில் ஏவுகணை சிதறல் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.
இச்சூழலில் ‘பதிலடி கொடுப்பதாக நினைத்து ஈரான் தாக்குதல் நடத்தினால், அதன் விளைவுகள் மேலும் மோசமடையும்’ என ஈரானுக்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
