ஈரான் எல்லையை கடந்து 170 இந்தியர்கள் ஆர்மீனியா வந்துள்ளனர்; மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பு

புதுடில்லி: போர்ச்சூழலில், ஈரான் எல்லையைக் கடந்து இதுவரை 170 இந்தியர்கள் ஆர்மீனியா வந்தடைந்துள்ளனர் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது;

பிரதமர் மோடி, ஈரான் அதிபர் மசூத் பெசெஸ்கியனுடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது இந்திய குடிமக்களின் பாதுகாப்பு, அவர்களின் நலன்சார்ந்த விஷயங்களை வலியுறுத்தினார். அங்கு நிலவும் பாதுகாப்புச்சூழல குறித்து தமது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினார்.

அங்கு தீவிரமடையும் மோதல் சூழலுக்கு வெகு விரைவில் தீர்வு காண வேண்டும் என்ற வகையில், பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரங்கள் மூலம் முன்னேறி செல்லவேண்டும் என்பது இந்தியாவின் நிலைப்பாடு என்பதை எடுத்துக்கூறினார்.

வெளியுறவு அமைச்சர் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சியுடன் உரையாடினார். இரு அமைச்சர்களும், இருநாடுகளின் விவகாரங்கள் குறித்தும், பிரிக்ஸ் தொடர்பான விவகாரங்கள் பற்றியும் விரிவாக விவாதித்தனர்.

இன்று வரை ஈரானில் இருந்து தரைவழியாக 170 இந்தியர்கள் எல்லை வழியாக ஆர்மீனியாவுக்கு சென்று இருக்கின்றனர். அவர்களில் பலரும் ஏற்கனவே இந்தியா திரும்பி உள்ளனர். மற்றவர்கள் அடுத்த சில நாட்களில இந்தியா திரும்ப இருக்கின்றனர்.

இவ்வாறு ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.

Source link