கொச்சி: அமெரிக்காவின் தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக, ஈரான் கேட்டுக் கொண்டதன் பேரில், அந்நாட்டு போர்க்கப்பலுக்கு இந்தியா பாதுகாப்பு அடைக்கலம் கொடுத்துள்ளது.
ஈரானின் கடற்படை மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதலை அதிகரித்து வருகின்றன. அண்மையில், இந்தியாவில் 2 நாள் கடற்படை பயிற்சியை முடித்து விட்டு, தாயம் திரும்பிக் கொண்டிருந்த ஈரானின் ‘டீனா’ என்ற போர்க்கப்பலை அமெரிக்கா தாக்கி அழித்தது. இதில், 87 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, மற்றொரு ஈரான் போர்க்கப்பலான ‘ஐ.ஆர்.ஐ.என்.எஸ்., புஷெர்’ என்ற போர்க் கப்பலை, தங்கள் நாட்டு கடல் எல்லைக்குள் அனுமதித்து இலங்கை ஆதரவு அளித்துள்ளது.
இந்த நிலையில், ஈரானின் கோரிக்கையின் பேரில், அந்நாட்டு கடற்படைக்கு சொந்தமான மற்றொரு கப்பலை கொச்சியில் நிறுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஈரான் மீதான கூட்டுத் தாக்குதலை அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடங்கிய பிப்ரவரி 28ம் தேதியன்று, சர்வதேச கடற்படை ஆய்வுக்கு வந்த ‘லவன்’ என்ற கப்பலை கொச்சியில் நிறுத்த அனுமதி கேட்டு ஈரான் கோரிக்கை விடுத்துள்ளது. அந்தக் கப்பலில் அவசர தொழில்நுட்ப சிக்கல்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கான அனுமதி மார்ச் 1ம் தேதி வழங்கப்பட்டு, மார்ச் 4ம் தேதியன்று ‘லவன்’ கொச்சியை வந்தடைந்தது. அக்கப்பலில் இருந்த 183 பணியாளர்கள் தற்போது கொச்சி துறைமுகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
