வாஷிங்டன்: ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களால், மேற்காசியாவில் உள்ள பல அமெரிக்க ராணுவ தளங்கள் பலத்த சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனால், தற்காலிக தளங்களுக்கு இடம் பெயர வேண்டிய கட்டாயத்திற்கு அமெரிக்க படைகள் தள்ளப்பட்டுள்ளன.மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து கடந்த பிப்., 28ல் துவங்கிய போர், 27வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. இந்த தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் மற்றும் மேற்காசியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் வாயிலாக தாக்குதல் நடத்தி வருகிறது.
மேற்காசியா முழுதும் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் நடத்திய தொடர் தாக்குதல்களால், பல முக்கியமான அமெரிக்க தளங்கள் பெருத்த சேதமடைந்துள்ளன. அவற்றை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அமெரிக்க படைகள், தற்காலிக தளங்களுக்கு மாறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
மேற்காசியாவில், 13 அமெரிக்க ராணுவத் தளங்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன. விமானப்படைகள் வழக்கம்போல் செயல்பட்டாலும், தரைப்படையினர், ஹோட்டல்கள், தற்காலிக இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.குவைதில் உள்ள தளங்கள் மிக மோசமான பாதிப்புகளை சந்தித்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் மற்றும் ராணுவ வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
குவைத்தில் உள்ள போர்ட் ஷுவைபா, அலி அல் சலேம் விமானப்படை தளம் மற்றும் கேம்ப் புஹ்ரிங் போன்ற தளங்கள் ஈரானிய தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளன. தற்காலிக இடங்களைத் தவிர, சில பணியாளர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தளங்கள் சேதமடைந்து, படைகள் சிதறடிக்கப்பட்டு, ஈரான் தன் தாக்குதல் திறனை வெளிப்படுத்தி வருவதால் மேற்காசியாவில் அமெரிக்காவின் நீண்டகால ராணுவ மையங்கள் கூட நேரடி அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது.
16 விமானங்களை இழந்தது!
ஈரானுடனான போர் துவங்கி ஒரு மாதத்திற்குள், அமெரிக்கா 16 போர் விமானங்களை இழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இவை அனைத்தும் எதிரி நாட்டு தாக்குதலால் மட்டும் நிகழவில்லை.
* எம்.க்யூ., 9 வகை ட்ரோன்கள் 12 ட்ரோன்கள் அழிக்கப்பட்டுள்ளன. இதில், 9 ட்ரோன்கள் ஈரான் ஏவுகணை தாக்குதலிலும், மற்றவை விபத்து மற்றும் தரைவழி தாக்குதலிலும் அழிக்கப்பட்டுள்ளன
* குவைத் வான்வெளியில் ஈரானின் ஏவுகணைகளை இடைமறிக்க முயன்றபோது, குவைத் வான் பாதுகாப்பு அமைப்பால் தவறுதலாக 3 எப் – 15 ரக போர் விமானங்கள் சுடப்பட்டதாகவும், இதின் விமானிகள் பத்திரமாக தப்பியதாகவும் கூறப்படுகிறது
*ஈராக் வான் பகுதியில் கே.சி., – 135 வகை எரிபொருள் நிரப்பும் விமானங்கள் வானில் மோதிக்கொண்டதில், 6 வீரர்கள் உயிரிழந்தனர்
* உலகின் அதிநவீன போர் விமானமாக கருதப்படும் எப் – 35 ரக விமானங்கள், ஈரானிய தரைப்படை தாக்குதலால் சேதமடைந்து அவசரமாக தரையிறக்கப்பட்டன
* இவை மட்டுமின்றி, ஈரானின் தொடர்ச்சியான தாக்குதல்களால் அமெரிக்காவின் வான் பாதுகாப்பு கட்டமைப்புகளும் பலவீனப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன
* கத்தாரில் உள்ள நீண்ட துார எச்சரிக்கை ரேடார் மற்றும் ஜோர்டானில் உள்ள ‘தாட்’ ஏவுகணை தடுப்பு அமைப்பின் முக்கிய ரேடார் ஆகியவை ஈரானின் தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ளன.
