ஈரான் பதிலடி தாக்குதலால் தீ பற்றி எரிந்த குவைத் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்

துபாய்: ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா சிறிய விமானம் மூலம் ஈரான் நடத்திய தாக்குதலில், குவைத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தீப்பற்றி எரிந்தது.

மேற்காசிய நாடான ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து, பிப்., 28 முதல் போர் தொடுத்து வருகின்றன. இதனால் அப்பிராந்தியத்தில் போர் பதற்றம் நிலவுகிறது.

அமெரிக்காவின் தாக்குதலால் கடுப்பான ஈரான், உலகின், 20 சதவீத கச்சா எண்ணெய் போக்குவரத்து நடக்கும் கடல் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது.

இதனால், நம் நாடு உட்பட உலகம் முழுதும் எரிவாயு, பெட்ரோலியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, குவைத்தில் உள்ள மினா அல் அஹ்மதி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை குறிவைத்து, ட்ரோன்கள் மூலம் ஈரான் நேற்று தாக்குதல் நடத்தியது.

இதில், அந்த நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். அதிர்ஷ்டவசமாக இந்த தாக்குதலில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. போர் துவங்கியதில் இருந்து இது மூன்றாவது தாக்குதல் என, குவைத் அரசு தெரிவித்துள்ளது.

எமிரேட்சிலும் தாக்குதல் ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபியை நோக்கி ஈரான் வீசிய ஏவுகணை ஒன்றை, அந்நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து தாக்கின.

இதில், ஏவுகணையின் பாகங்கள் ஹப்ஷான் எரிவாயு நிலையத்தின் பதப்படுத்தும் தளத்தில் விழுந்தன. இதனால் அங்கு தீ விபத்து ஏற்பட்டதால், அனைத்து செயல்பாடுகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

அபுதாபியில் அமைந்துள்ள ஹப்ஷான் எரிவாயு நிலையம், ஐக்கிய அரபு எமிரேட்சின் முக்கிய எரிவாயு மற்றும் எண்ணெய் உற்பத்தி மையமாகும். அங்கு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதால், மேற்காசி நாடுகளின் எரிசக்தி வினியோ கத்தில் முடக்கம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, ஈரான் போர் குறித்து அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.,வின் முன்னாள் இயக்குநர் பில் பர்ன்ஸ் கூறியதாவது:

அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானின் உச்ச தலைவராக இருந்த கமேனி போன்ற உயர்மட்ட தலைவர்கள் கொல்லப்பட்டதை ஆட்சி மாற்றம் என, கருதுகிறார். அது தவறு. ஈரான் அரசு தன் பொருளாதாரத்தை நிர்வகிப்பதில் திறமையற்றதாக இருக்கலாம். ஆனால், தன்னைத்தானே தற்காப்பதில் மிக வலிமையானது.

மூத் த தலைவர்கள் கொல்லப்பட்டாலும், அந்த அரசு வீழ்ந்து விடாது. மாறாக, அது இன்னமும் தீவிரமானதாக மாறும்.

ஈரான் அரசு காலப்போக்கில் உள்நாட்டு காரணங்களால் தானாகவே வீழ்ச்சியடையும் என கருதப்பட்ட நிலையில், தற்போதைய போர் அந்த வீழ்ச்சியை தாமதப் படுத்தி உள்ளது. மேலும், அந்நாட்டு மக்களை தேச பற்றின் பெயரால் ஒன்று திரட்டி உள்ளது.

ஈரானின் முக்கிய எண்ணெய் முனையமான கார்க் தீவு அல்லது ஹார்முஸ் ஜலசந்தியை ஒட்டிய பகுதிகளை கைப்பற்ற அதிபர் டிரம்ப் தரைவழி தாக்குதலுக்கு முயற்சி செய்யலாம். ஆனால், இவை ஆபத்தானவை.

இவ்வாறு அவர் கூறினார்.

போரால் உலகளவில்

நிகழ்ந்து வரும் சிக்கல்கள்

• தென் கொரியாவின் சியோலில் நடந்த சந்திப்பில், அந்நாட்டு அதிபர் லீ ஜே மியுங், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் ஆகியோர் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கு தேவையான நடவடிக்கைகளில் ஒன்றிணைந்து செயல்பட ஒப்புக்கொண்டனர். பாதுகாப்பான கப்பல் போக்குவரத்தை உறுதி செய்யவும் இருவரும் உறுதிபூண்டனர். • போர் தொடர்பான எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க, வங்கதேசம் நேற்று முதல் அலுவலக நேரத்தை குறைத்து, வணிக வளாகங்களை முன்கூட்டியே மூட உத்தரவிட்டுள்ளது. எரிபொருள் மற்றும் மின்சார செலவில், 30 சதவீதத்தை குறைக்கவும், புதிய வாகனங்கள், கப்பல்கள் மற்றும் விமானங்கள் வாங்குவதை நிறுத்தவும் அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. • ஈஸ்டர் விடுமுறைக்காக வெளியே செல்லும் வாகன ஓட்டிகள் நகரங்களிலேயே எரிபொருட்களை நிரப்பிக் கொள்ளுமாறு ஆஸ்திரேலிய எரிசக்தி அமைச்சர் கிறிஸ்போவன் வலியுறுத்தியுள்ளார். நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள, 182 எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் டீசல் தீர்ந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Source link