ஈரான் புதிய உச்ச தலைவர் கோமா நிலையில் உள்ளார்: பிரிட்டன் ஊடகம் தகவல்

லண்டன்: ஈரானின் புதிய உச்ச தலைவராக பதவியேற்ற உயிரிழந்த கமேனியின் மகன் மோஜ்தபா கமேனி, சமீபத்தில் நடந்த வான் தாக்குதலில் ஒரு கால் இழந்து கோமா நிலையில் உள்ளதாக பிரிட்டன் நாட்டின் ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது.

மேற்காசிய நாடான ஈரான் மீது, பிப்., 28ல் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து வான்வழி தாக்குதலை துவங்கின. இதில், அந்நாட்டின் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.

அதன்பின்னும் மேற்கு ஆசிய பிராந்தியத்தில் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. கமேனியின் மகன் மோஜ்தபா கமேனி புதிய உச்ச தலைவராக அந்நாட்டின் முஸ்லிம் மத குருக்களால் நியமிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், கமேனி உயிரிழந்த அதே தாக்குதலில், அவரது மகன் மோஜ்தபா கமேனியும் படுகாயமடைந்து கோமா நிலையில் இருப்பதாக, ஐரோப்பிய நாடான பிரிட்டன் பத்திரிகையான, ‘சன்’ செய்தி வெளியிட்டுள்ளது. இருப்பினும், அவரையே உச்ச தலைவராக மத குருக்கள் தேர்வு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

ஈரானின் புதிய உச்ச தலைவராக தேர்வு செய்யப்பட்ட மோஜ்தபா கமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டு வான் தாக்குதலில் படுகாயமடைந்து கோமா நிலையில் இருக்கிறார். இருப்பினும், மத குருமார்கள் அவரையே உச்ச தலைவராக நியமித்துள்ளனர்.

அவருக்கு ஒரு கால் துண்டிக்கப்பட்டதுடன், கல்லீரல் பகுதியில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. தற்போது டெஹ்ரானில் உள்ள சினா மருத்துவ பல்கலை மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இஸ்லாமிய புரட்சிகர ராணுவ படையின் பிரிவுகள் தனித்தனி கட்டுப்பாட்டில் செயல்பட்டு, போர் நடவடிக்கைகளை தொடர்ந்து நடத்தி வருகின்றன.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

உயிருடன் உள்ளார் மோஜ்தபா: டிரம்ப் ஈரான் புதிய உச்ச தலைவர் மோஜ்தபா நிலைமை குறித்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகையில், ”மோஜ்தபா கமேனி காயமடைந்திருக்கலாம். ஆனால், அவர் உயிருடன் இருக்கக்கூடும்,” என்றார்.

‘உயிருக்கு உத்தரவாதம் இல்லை’ இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: அமெரிக்கா – இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக நடத்தி வரும் நடவடிக்கைகள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக முன்னேற்றம் கண்டு வருகிறது. ஈரானின் பயங்கரவாத தலைவர்கள் மோஜ்தபா உள்ளிட்டோரின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை . ஈரானின் புரட்சிகர ராணுவம் மற்றும் பாசிஜ் படைகளுக்கு எதிராக கடும் தாக்குதல்கள் நடத்தி வருகிறோம். ஈரானில் உள்ள மக்களுக்கு புதிய சுதந்திர பாதை விரைவில் உருவாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Source link