ஈரான் போரால் ஏற்றுமதி, இறக்குமதி பாதிப்பு: மெல்ல முடங்குகிறது சரக்கு போக்குவரத்து

சென்னை: அமெரிக்கா – ஈரான் போர் காரணமாக, ஏற்றுமதி, இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் சரக்கு போக்குவரத்து, மெல்ல முடங்கி வருகிறது.

நாடு முழுதும் உள்ள பல்வேறு துறைமுகங்கள் வாயிலாக, சரக்கு போக்குவரத்து நடந்து வருகிறது. அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் காரணமாக, ஹார்முஸ் நீரினையை ஈரான் மூடியுள்ளது.

கச்சா எண்ணெய் கட்டணம் வசூலித்து, அவ்வழியாக சரக்கு கப்பல்களை அனுமதித்து வருகிறது. அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளுக்கு உதவியாக உள்ள நாடுகளின் கப்பல்கள் செல்ல, தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதனால், இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் மற்றும் பல்வேறு வகையான பொருட்கள் வருவது பாதிக்கப்பட்டுள்ளது. உணவுப் பொருட்கள் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், துறைமுகங்களுக்கு சரக்கு ஏற்றி செல்லும், வாகனங்களின் போக்குவரத்து குறைந்து வருகிறது. இதனால், டிரைவர்கள், கிளினீர்கள், புக்கிங் ஏஜன்சிகள் நடத்துவோர், வாகன உரிமையாளர்கள் உள்ளிட்டோரின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படும் சூழல் உள்ளது.

கன்டெய்னர் லாரி இது குறித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சென்னை மற்றும் எண்ணுார் துறைமுகங்களுக்கு, வெளிநாடுகளில் இருந்து பொருட்களை ஏற்றி, இறக்கி செல்வதற்கு, பல்வேறு மாநிலங்களில் இருந்து, சரக்கு லாரிகள் மற்றும் கன்டெய்னர் லாரிகள் தினமும் வருகின்றன.

நாட்டின் மற்ற துறைமுகங்களில், இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் தமிழகம் வரும்.

போர் காரணமாக, ஏற்றுமதி, இறக்குமதி பாதித்துள்ளதால், சென்னை – கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நல்லுார்; சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஸ்ரீபெரும்புதுார்; சென்னை பைபாஸ் சாலையில் உள்ள வானகரம், சூரப்பட்டு, வடக்கு உள்வட்ட சாலையில் உள்ள மாத்துார்; சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பரனுார் சுங்கச்சாவடிகள் வழியாக, சரக்கு வாகனங்கள் பயணிப்பது, 30 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளது.

போர் தொடர்ந்தால், ஏப்ரல் மாதத்திற்குள், இது 60 சதவீதமாக அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link