'ஈரான் போரை எப்போது முடிக்கலாம்' :இஸ்ரேல் பிரதமருடன் பேசுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்: ஈரானுடனான போர் எப்போது முடிவுக்கு வரும் என்ற கேள்விக்கு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் கலந்தாலோசித்து, பரஸ்பர முடிவெடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மேற்காசிய நாடான ஈரான் மீதான, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடுத்துள்ள போர், 10வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. கடந்தாண்டு ஜூன் மாதம் நடந்த போர், 12 நாட்கள் நீடித்த நிலையில், தற்போதைய போர் நீண்ட காலம் நீடிக்குமா என்ற அச்சம் எழுந்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று கூறியுள்ளதாவது:

இஸ்ரேலையும் அதனை சுற்றியுள்ள பிற நாடுகளையும் ஈரான் அழிக்க பார்க்கிறது. இதை தடுக்க நாங்கள் இணைந்து செயல்பட்டுள்ளோம். இஸ்ரேலை அழிக்க நினைத்த ஒரு நாட்டை நாங்கள் அழித்துள்ளோம்.

நானும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் இல்லாவிட்டால், இஸ்ரேலை ஈரான் அழித்திருக்கும்.

பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் அமெரிக்க நலன்களை கருத்தில் கொண்டே போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து இறுதி முடிவெடுக்கப்படும். இது தொடர்பாக நெதன்யாகுவுடன் பேசி வருகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link