வாஷிங்டன்: ”ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் இரண்டு முதல் மூன்று வாரங்களில் முடிவடையக்கூடும். ஹார்முஸ் ஜலசந்தி பாதுகாப்பு தொடர்பான பொறுப்பை எண்ணெய் போக்குவரத்துக்காக அதை சார்ந்துள்ள நாடுகளே பார்த்துக் கொள்ள வேண்டும்,” என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேற்கு ஆசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து, பிப்., 28ல் போரை துவக்கின. சில நாட்களில் இந்த போர் முடிவடையும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எண்ணினார். ஆனால், ஈரான் பதில் தாக்குதலில் இறங்கியது.
இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் குண்டு வீசி வருகிறது. வளைகுடா நாடுகளின் எண்ணெய் கப்பல்கள் செல்லும் ஒரே கடல் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை அந்நாடு முடக்கியுள்ளது. இதனால், கச்சா எண்ணெய் விலை அமெரிக்காவிலும் அதிகரித்தது.
மேலும், அத்தியாவசிய பொருட்கள் விலையும் உயர்ந்து பொருளாதார நெருக்கடியை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. இதனால், அதிபர் டிரம்புக்கு அந்நாட்டு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அதிபர் டிரம்ப் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் இரண்டு முதல் மூன்று வாரங்களில் முடிவடையக்கூடும். ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் இனி அமெரிக்கா தலையிடாது.
அந்த கடல் வழியை பயன்படுத்தும் நாடுகளே அதன் பாதுகாப்புக்கான பொறுப்பை ஏற்க வேண்டும்.
போர் முயற்சிக்கு போதுமான ஆதரவு அளிக்காத கூட்டணி நாடுகள், உங்களுக்கு தேவையான எண்ணெயை நீங்களே பெற்றுக்கொள்ளுங்கள்.
இவ்வாறு கூறினார்.
ஈரானின் நிலைப்பாடு குறித்து அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “அமெரிக்காவிடம் இருந்து பேச்சு நடத்துவதற்கான செய்தி நேரடியாக எங்களுக்கு வந்தது. இருப்பினும், எங்களுக்கு அமெரிக்கா மீது துளி கூட நம்பிக்கை இல்லை,” என்றார்.
அதிபர் டிரம்பின் அறிவிப்பால் ஈரான் போரின் தீவிரம் வரும் நாட்களில் குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில், 100 டாலருக்கு கீழ் சரிந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் சந்தை குறியீடான, ‘பிரென்ட்’ 4.7 சதவீதம் குறைந்து, 99.05 டாலராகவும், அமெரிக்க கச்சா எண்ணெய், 97.33 டாலராகவும் குறைந்தது. ஆசிய பங் குச் சந்தைகளில் உயர்வு பதிவாகியுள்ளது.
பிரிட்டன் தலைமையில்
கூடும் 35 நாடுகள்
ஐரோப்பிய நாடான பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது குறித்து இந்த வாரம் சர்வதேச மாநாடு நடத்தப்படும் என தெரிவித்தார். ஹார்முஸ் ஜலசந்தியின் பாதுகாப்பை மீண்டும் நிலைநிறுத்த, இதில், 35 நாடுகள் பங்கேற்க உள்ளதாக அவர் கூறினார். இதில் நம் நாடும் பங்கேற்க உள்ளது.
பொது போக்குவரத்துக்கு
மாறும் ஆ௴ஸி.,
ஈரான் போரால் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்ற அச்சத்தால் பொது போக்குவரத்தை பயன்படுத்தும்படி ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ் நாட்டு மக்களிடம் வலியுறுத்தி உள்ளார்.
