ஈரான் போர் விவகாரத்தில் இந்தியாவின் மவுனம் சிறப்பான ராஜதந்திரம்: மத்திய அரசுக்கு சசி தரூர் புகழாரம்

புதுடில்லி : ”அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் ஈரான் நடத்தி வரும் போர் விவகாரத்தில், மத்திய அரசு மவுனமாக இருப்பது கோழைத்தனம் அல்ல; சிறந்த ராஜதந்திரம்,” என, காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் தெரிவித்துள்ளார்.

மேற்காசிய பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன், ஈரான் நடத்தி வரும் போர் தொடர்பாக மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், கேரளாவின் திருவனந்தபுரம் தொகுதி லோக்சபா எம்.பி.,யுமான சசி தரூர் கூறியுள்ளதாவது: இந்த போரை சர்வதேச சட்டத்தின் கீழ் நியாயப்படுத்த முடியாது. இறையாண்மை உட்பட நம் நாட்டில் நீண்ட காலமாக பேணிவரும் கொள்கைகளை மீறும் வகையில் இந்த போர் உள்ளது.

இறையாண்மை

இருப்பினும், இந்த விவகாரத்தில் இந்தியா எந்த பதிலும் சொல்லாமல் நிதானத்தை கடைப்பிடித்து வருகிறது. மத்திய அரசின் இந்த மவுனம், போரை ஆதரிப்பதாக எடுத்துக் கொள்ள

முடியாது. இந்தப் போரில், ஈரான் உச்சத்தலைவர் அயத்துல்லா அலி கமேனி உயிரிழந்த போது, மத்திய அரசு உடனடியாக இரங்கல் தெரிவித்திருக்க வேண்டும். அப்படி செய்யாதது கண்டிக்கத்தக்கதும் அல்ல. உலகளாவிய நீதிக்கு குரல் கொடுக்கும் அதே வேளையில், நாட்டின் இறையாண்மையை பாதுகாப்பதும் முக்கியம்.

அதைத்தான் மத்திய அரசு பின்பற்றுகிறது. உலக நாடுகளுடனான கொள்கைகள் முரண்படும் போது, பல சமயங்களில் இந்தியா மவுனமாக இருந்துள்ளது.

இழப்பு

அமெரிக்காவில் மட்டுமல்ல, தற்போது ஈரானிய ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை எதிர்கொண்டுள்ள வளைகுடா அரபு நாடுகளிலும் இந்தியாவுக்கு பெரும் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய் வர்த்தகம், இந்த பிராந்தியத்தின் வாயிலாக நடக்கிறது. நமது எரிசக்திப் பாதுகாப்பு, வளைகுடா எண்ணெய் மற்றும் எரிவாயுவைச் சார்ந்துள்ளது. அங்குள்ள 90 லட்சம் இந்திய தொழிலாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் நல்வாழ்வு இந்தப் போரினால் பாதிக்கப்படக்கூடாது என்பதே இந்தியாவின் எண்ணம்.எனவே, ஈரான் போர் விவகாரத்தில் மத்திய அரசு மவுனம் காப்பது கோழைத்தனமாகாது. இது மிகச் சிறந்த ராஜதந்திரம்.

அவசரகதியில் எடுக்கப்படும் முடிவுகள், கோடிக்கணக்கான மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். தேச நலனுக்காக மத்திய அரசு நிதானத்தை கடைப்பிடிப்பதே

அவசியம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஆப்பரேஷன் சிந்துார் உட்பட பல்வேறு விவகாரங்களில், காங்., தலைமைக்கு எதிரான கருத்துகளை கூறுவதுடன் மத்திய அரசை சசி தரூர் புகழ்ந்து வருகிறார். இந்த சூழலில், மீண்டும் மத்திய அரசை அவர் பாராட்டியுள்ளது காங்கிரஸ் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்றொரு காங்., – எம்.பி.,யும் பாராட்டு

காங்கிரஸ் எம்.பி., சசி தரூரைத் தொடர்ந்து, அக்கட்சியின் மற்றொரு எம்.பி.,யான மணீஷ் திவாரியும் மத்திய அரசின் நிலைப்பாட்டை பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: மேற்காசிய பிராந்தியத்தில் ஒரே ஒரு போர் மட்டும் நடக்கவில்லை. ஒரே நேரத்தில் அங்கு பல போர்கள் நிகழ்ந்து வருகின்றன. பரந்த மத்திய கிழக்கு பிராந்தியத்தில், நாம் எப்போதும் ஒரு துணை பங்குதாரராகவே இருந்து வந்துள்ளோம். அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் போரில், நாம் ஒரு தரப்பினரை மட்டும் சார்ந்திருக்க முடியாது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு, விவேகத்துடனும், எச்சரிக்கையுடனும் சிறப்பாக செயல்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Source link