ஈரான் மக்கள் அழைக்கின்றனர்: பட்டத்து இளவரசர் அறிக்கை

வாஷிங்டன்: ” அதிகார மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் என்னை அழைக்கின்றனர். எனது பொறுப்பை நான் ஏற்கிறேன். நமது நாட்டையும், நமது வெளிநாட்டு உறவுகளையும் இயல்பு நிலைக்கு திரும்ப செய்ய எனக்கு மக்கள் உத்தரவிட்டுள்ளனர்,” என அமெரிக்காவில் வசிக்கும் ஈரானிய பட்டத்து இளவரசர் ரெசா பஹ்லவி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், கத்தார், குவைத், ஓமன், ஜோர்டான், ஈராக் மற்றும் சவுதி அரேபியா மீது ஏவுகணைகளை ஏவி, நமது அண்டை நாடுகளை ஈரான் குறிவைக்கிறது.

பயங்கரவாத ஆட்சி

அவர்களின் இறையாண்மையை மீறுவது ஏற்றுக் கொள்ள முடியாதது. அது கண்டனத்திற்கு உரியது. ஆனால், இது ஒன்றும் புதிது அல்ல. ஈரான் எப்போதும் இப்படித்தான் இருந்து வருகிறது. அதற்கு முடிவு கட்ட வேண்டும்.

கடந்த ஐந்து தசாப்தங்களாக பயங்கரவாத ஆட்சி, இந்த பிராந்தியத்தில் ரத்தக்களறியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆசாத்துக்கு ஆதரவு கொடுத்து சிரியாவை கல்லறையாக மாற்றியது. ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பை விதைத்து லெபனானை, நாட்டிற்குள்ளேயே தனி நாடாக மாற்றியது. அரேபிய தீபகற்பத்தில் ஸ்திரத்தன்மையை குலைக்க ஹவுதிகளுக்கு ஆயுதம் வழங்கியுள்ளது.

ஈராக்கிய இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும் நோக்கத்தில் அந்நாட்டில் உள்ள போராளிகளுக்கு அதிகாரம் அளித்தது. சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சின் பொருளாதார மையங்களை தாக்கியது. இது எதுவும் ஈரானிய மக்களின் விருப்பமாக இருந்ததில்லை. மாறாக நாட்டை ஆக்கிரமித்த ஆட்சியின் விருப்பமாக இருந்தது. இப்போது அது மாறிவிட்டது.

ஆசாத் ஓடிவிட்டார். ஹிஸ்புல்லா அமைப்பு அழிக்கப்பட்டுவிட்டது. ஈரான் ஆட்சியின் அணுஆயுததிட்டம் பின்னடைவை சந்தித்துள்ளது. பொருளாதாரம் வீழ்ச்சியில் உள்ளது. ஆட்சியின் ஆக்கிரமிப்பு தூண்கள் நொறுங்கி வருகின்றன.
இந்த தருணத்தை அடைய ஈரான் மக்கள் தங்களது ரத்தத்தை விலை கொடுத்துள்ளனர். இரண்டு நாட்களில், இந்த ஆட்சியாளர்கள் பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்தது. ஆனால், அவர்களால் மக்களை உடைக்கவில்லை. மாறாக ஆட்சியே உடைந்து கொண்டிருக்கிறது.

கூட்டாளி

இன்று வரலாறு நமது எதிர்கால திறனை நமக்கு நினைவூட்டுகிறது. ஈரானிய புரட்சிக்கு முன்னர், மன்னர் பைசல், ஷேக் சயீத், மன்னர் ஹூசைன், அதிபர் சதாத் வரை அரபு தலைவர்களுடன் இணைந்து ஈரான் நெருக்கமாக பணியாற்றியது. ஓமனில் புரட்சியில் இருந்து மன்னர் கபூஸ் நாட்டை பாதுகாக்க எனது தந்தை உதவினார். அப்போது நாங்கள் உண்மையான கூட்டாளிகளாக இருந்தோம். நாங்கள் மீண்டும் உண்மையான கூட்டாளிகளாக இருப்போம்.

இந்த ஆட்சி போன பிறகு, அதிகார மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் என்னை அழைக்கின்றனர். எனது பொறுப்பை நான் ஏற்கிறேன். நமது நாட்டையும், நமது வெளிநாட்டு உறவுகளையும் இயல்பு நிலைக்கு திரும்ப செய்ய எனக்கு மக்கள் உத்தரவிட்டுள்ளனர் . நான் அதனை சரியாக செய்வேன். மாற்றம் ஒழுங்காக இருப்பதை உறுதி செய்வதையும், நாடு நிலைப்படுத்தப்படுவதையும் ஈரானியர்கள் ஓட்டு பெட்டி மூலம் தங்கள் எதிர்காலத்தை தீர்மானிப்பதை உறுதி செய்வதை எனது உறுதிப்பாடு. கடந்த கால மாற்றங்களின் தவறுகளை நாங்கள் மீண்டும் செய்ய மாட்டோம்.

இ்பபோது அரபு உலகில் உள்ள நமது நண்பர்கள் எங்களுடன் இணையுமாறு கேட்டுக் கொள்கிறேன். நமது இடைக்கால அரசை அங்கீகரித்து அதில் ஈடுபட தயார் ஆகுங்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் ரெசா பஹ்லவி கூறியுள்ளார்.

Source link