ஈரான் விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு… சர்ட்டிபிகேட்: காங்., ராகுல் கருத்தில் 4 தலைவர்கள் முரண்பாடு

புதுடில்லி: ஈரான் போர் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் காஸ் சிலிண்டர் வினியோகத்தில் பிரதமர் மோடியை லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் கமல்நாத், ஆனந்த் சர்மா, சசி தரூர் மற்றும் மணிஷ் திவாரி போன்ற மூத்த காங்கிரஸ் தலைவர்கள் தற்போதைய நெருக்கடியை மத்திய அரசு சிறப்பாக கையாண்டு வருவதாக பாராட்டு தெரிவித்துள்ளனர். ஜம்மு – காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நடத்தப்பட்ட ‘ஆப்பரேஷன் சிந்துார்’ நடவடிக்கைக்கு பின், ஈரான் மீதான போரும், சமையல் காஸ் சிலிண்டர் வினியோகமும் காங்கிரஸ் கட்சிக்குள் கருத்து வேறுபாடுகளை உருவாக்கி உள்ளது.

‘மேற்காசிய போர் விவகாரம் மற்றும் எரிபொருள் வினியோகத்தை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு சரியாக கையாளவில்லை’ என, காங்., முன்னாள் தலைவரும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் விமர்சித்து வருகிறார்.

ஆனால், அவரது கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களோ, ராகுலின் கருத்தில் இருந்து முரண்பட்டு, தற்போதைய சூழலை மத்திய அரசு சிறப்பாக கையாண்டு வருவதாக பாராட்டி வருகின்றனர்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, வெளியுறவு கொள்கையில் சமரசம் செய்து கொண்டு விட்டது என ராகுல் குற்றஞ்சாட்டிய நிலையில், காங்., – எம்.பி.,யும், மூத்த தலைவருமான சசி தரூர், ‘மிக பொறுப்புடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது’ என புகழ்ந்து தள்ளி இருக்கிறார்.

மேற்காசிய போர் தொடர்பாக தனியார் ‘டிவி’க்கு பேட்டியளித்த காங்கிரசின் மற்றொரு எம்.பி., மணிஷ் திவாரி, ‘துாதரக ரீதியிலான உறவுகளில் மத்திய அரசு சரியான நிலைப்பாட்டை எடுத்துள்ளது’ என பாராட்டினார்.

இவருக்கு அடுத்தபடியாக முன்னாள் மத்திய அமைச்சரான ஆனந்த் சர்மா, மத்திய பிரதேச முன்னாள் முதல்வரான கமல்நாத் ஆகிய இரு காங்., மூத்த தலைவர்கள் கூட ‘இக்கட்டான சூழலை மத்திய அரசு திறம்பட சமாளித்து வருகிறது’ என வெளிப்படையாக பேசியுள்ளனர்.

காங்கிரஸ் மேலிடம், நாடு முழுதும் சமையல் காஸ் சிலிண்டருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டிய நிலையில், கமல்நாத்தோ, ‘அப்படி ஒரு தட்டுப்பாடு எங்கும் இல்லை; தட்டுப்பாடு ஏற்பட்டது போன்ற சூழல் தான் நிலவுகிறது’ என, பா.ஜ.,வுக்கும், மத்திய அரசுக்கும் ஆதரவாக பேசி இருக்கிறார்.

இது தான் சரியான தருணம் என காத்திருந்த பா.ஜ., அந்த வெடிகுண்டை காங்., மேலிடம் மீது தற்போது வீசி இருக்கிறது.

இது குறித்து, மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறுகையில், ”நாடு முழுதும் தற்போது சமையல் காஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசலுக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை என, காங்., மூத்த தலைவரான கமல்நாத்தே ஒப்புக் கொண்டுள்ளார். எனவே, அரசியல் ஆதாயத்திற்காக மக்களை அச்சுறுத்தும் வகையில் பொய்யான தகவல்கள் பரப்புவதை, காங்., இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும்,” என விமர்சித்துள்ளார்.

பா.ஜ., தேசிய செய்தி தொடர்பாளரான பிரதீப் பண்டாரி, ”ராகுல் ஒரு சந்தர்ப்பவாதி; தேச விரோதி என்பது, காங்., தலைவர்களுக்கு கூட இப்போது புரிய ஆரம்பித்துவிட்டது,” என கூறி, புதிய வெடிகுண்டை வீசியுள்ளார்.

காங்., கட்சிக்குள் இப்படி கருத்து வேறுபாடுகள் நிலவுவது புதிது அல்ல. ஆப்பரேஷன் சிந்துார் விவகாரத்தின் போது கட்சிக்குள் முரண்பாடு வெடித்து புகைச்சல் ஏற்பட்டது.

ஆப்பரேஷன் சிந்துார் விவகாரத்தை அரசியல் ஆதாயத்திற்காக மத்திய அரசு கையில் எடுத்ததாக ராகுல் விமர்சித்திருந்த நிலையில், ‘நாடு என வந்துவிட்டால் கட்சி பாகுபாடுகளை மறந்து விட வேண்டும்’ என சசி தரூர் பேசி இருந்தார்.

தவிர, ஆப்பரேஷன் சிந்துார் விவகாரம் தொடர்பாக உலக நாடுகளிடம் விளக்கம் அளிப்பதற்காக, மத்திய அரசு அமைத்த உயர்நிலை பிரதிநிதிகள் குழுவிலும் காங்., – எம்.பி., சசி தரூர் இடம் பெற்றார்; மத்திய அரசு சார்பில் அமெரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு சென்று, நம் நாட்டின் நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துரைத்து திரும்பினார்.

சொந்த கட்சியில் இருப்பவர்களே பா.ஜ.,வுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததால், ஆப்பரேஷன் சிந்துார் தொடர்பாக பார்லி.,யில் நடந்த விவாதத்தின்போது, சசி தரூர், மணிஷ் திவாரி இருவருக்கும் பேச காங்., மேலிடம் வாய்ப்பு தரவில்லை.

தற்போது மேற்காசிய போர் விவகாரமும் காங்கிரஸ் கட்சிக்குள் மீண்டும் பிளவை ஏற்படுத்தி இருக்கிறது.

Source link