“தமிழ்நாட்டில் வேறெங்கும் இல்லாத வகையில் கர்ப்ப கிரக உற்சவ மூர்த்திக்கு பெண்கள் புனித நீர் ஊற்றி வழிபடும் நிகழ்ச்சி இங்கு மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பால், இளநீர், திருமஞ்சனம், கலந்த புனித நீரை ஊற்றி பெண்கள் வழிபட்டனர்” – கோயில் நிர்வாகத்தினர்.

மாசி மாதத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் மாசி திருவிழாக்கள் களைகட்டத் தொடங்கியுள்ளன.
ஈரோடு மாவட்டம் பவானியில் அமைந்திருக்கும் செல்லியாண்டி அம்மன் கோயில் மாசி திருவிழா கடந்த பிப்ரவரி மாதம் 17 – ம் தேதியன்று கோலாகலமாகத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பவானி நகர் முழுவதும் உற்சவ மூர்த்திகளின் தேர் பவனி நாள்தோறும் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வான கர்ப்ப கிரக உற்சவ மூர்த்திக்கு பெண்கள் புனித நீர் ஊற்றி வழிபடும் சிறப்பு நிகழ்வு நேற்றுமுன்தினம் இரவு தொடங்கி நேற்று காலை வரை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பெண்கள் நீண்ட வரிசையில் நின்று புனித நீரை ஊற்றி வழிபட்டனர்.
இந்தத் திருவிழா குறித்து தெரிவித்த கோயில் நிர்வாகத்தினர், “தமிழ்நாட்டில் வேறெங்கும் இல்லாத வகையில் கர்ப்ப கிரக உற்சவ மூர்த்திக்கு பெண்கள் புனித நீர் ஊற்றி வழிபடும் நிகழ்ச்சி இங்கு மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
பால், இளநீர், திருமஞ்சனம், கலந்த புனித நீரை ஊற்றி பெண்கள் வழிபட்டனர்.

நோய் நொடிகளில் இருந்து நம்மைப் பாதுகாக்கும் செல்லியாண்டி அம்மனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பக்தர்கள் உடல்களில் சேறு பூசும் நேற்றிக்கடன் நிகழ்வும் நடைபெறுகின்றன.
அம்மன் திருவீதி உலா நடைபெற்ற வழிநெடுகிலும் மிளகு கலந்த உப்பை பெண்கள் பலரும் காணிக்கையாகச் செலுத்தி வழிபட்டனர்” என்றனர்.
