ஈரோட்டில் பயங்கரம்; மகனைக் கொன்றவரை கல்லால் தாக்கி உயிரை பறித்த தம்பதி!

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள தொட்டகாஜனூர் கிராமத்தை சேர்ந்தவர் மாதப்பா. இவரது மனைவி தொட்டம்மா. இவா்களது மகன் ராகவன் (11). இவா்களது வீட்டின் அருகே தொட்டம்மாவின் சித்தி சிக்கம்மா வீடு உள்ளது. இவரது வீட்டுக்கு பேரன் ராகவன் அடிக்கடி சென்று வருவது வழக்கம்.

இந்த நிலையில் சென்ற ஆண்டு ஏப்ரல் 12 ஆம் தேதி நள்ளிரவு தொட்டகாஜனூர் கிராமத்தில் சிக்கம்மா மற்றும் பேரன் ராகவன் ஆகியோர் சுத்தியால் தாக்கி கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர். இந்த இரட்டை கொலை வழக்கில் உள்ளுரை சேர்ந்த குற்றவாளிகளான ஜேசிபி ஓட்டுநர் நாகேஷ் மற்றும் அவரது காதலி ஆகிய இருவரையும் தாளவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  விசாரணையில் கொலை செய்யப்பட்ட சிக்கம்மா மற்றும் நாகேஷிற்கு பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனையால் கொலை செய்ததாகவும், கொலை செய்யும் போது அருகில் உறங்கிக் கொண்டிருந்த சிறுவன் ராகவன் வெளியில் கூறிவிடுவான் என சிறுவனையும் சேர்த்து இரட்டை கொலை செய்ததும், இதற்கு உடந்தையாக காதலி இருந்ததாகவும் விசாரணையில் தெரிவித்திருந்தனர்.

6 மாதங்களுக்கு பிறகு ஜாமீனில் நாகேஷ் மற்றும் காதலி இருவரும் வெளி வந்துள்ளனர். இதில் நாகேஷ் கர்நாடகா மற்றும் ஆசனூர் பகுதிகளில் பதுங்கி இருந்து பணி புரிந்து வந்துள்ளார். மேலும் தொட்டகாஜனூர் கிராமத்திற்கும் அவ்வப்போது சென்று வந்துள்ளார். இந்த நிலையில் நாகேஷ் தொட்டகாஜனூருக்கு வந்து செல்வது ராகவனின் குடும்பத்தாருக்கு தெரியவந்துள்ளது. தனது மகனை கொன்று விட்டு நாகேஷ் சுதந்திரமாக நடமாடி வந்தது சிறுவனின் குடும்பத்தினருக்கு கோபத்தையும் எரிச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.

நாகேஷ் மீது ஆத்திரத்தில் இருந்த கொலையான சிறுவனின் தந்தை மாதேவப்பா அவருடைய மனைவி தொட்டம்மாவுக்கு ஆகியோர் நாகேஷிடம் மகனை ஏன் கொலை செய்தாய் என கேட்டதில் ஏற்பட்ட தகராறில் சிறுவனின் தந்தை, அவரது மனைவி ஆகியோர் நாகேஷை சரமாரியாக கல்லால் தாக்கியதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்துள்ளார். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் நாகேஷ் மீட்டு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் தாளவாடி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே நாகேஷ் இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து கொலை செய்த மாதேவப்ப அவரது மனைவி ஆகியோரை கைது செய்த தாளவாடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மகனை கொன்ற ஆத்திரத்தில் பெற்றோர் கொலை செய்த சம்பவம் தாளவாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link