உக்ரைனில் மருத்துவ கட்டமைப்புகள் மீது தாக்குதலை அதிகரித்த ரஷ்யா; உலக சுகாதார நிறுவனம் கவலை

கீவ்: கடந்தாண்டு உக்ரைனில் மருத்துவ கட்டமைப்புகள் மீது ரஷ்யா 20 சதவீதம் தாக்குதலை அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா – உக்ரைன் இடையே போர் மூண்டது. தற்போது 5ம் ஆண்டாக நடக்கும் இந்தப் போரில், ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். மேலும், உக்ரைனுக்குள் நுழைந்துள்ள ரஷ்ய படைகள், ஒவ்வொரு பகுதிகளாக கைப்பற்றி வருகின்றன. இதனிடையே, இரு நாடுகளுக்கு இடையயான போரை நிறுத்துவது தொடர்பாக உக்ரைன் கொண்டு வந்த தீர்மானத்தை, பெரும்பான்மை ஆதரவுடன் ஐநா சபை ஏற்றுக் கொண்டது.

இந்த நிலையில், கடந்த 2024ம் ஆண்டை விட 2025ல் உக்ரைனில் மருத்துவ கட்டமைப்புகள் மீது ரஷ்யா 20 சதவீதம் தாக்குதலை அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. போர் துவங்கியது முதல் தற்போது வரை, மருத்துவமனைகள், ஆம்புலன்ஸ்கள், மருந்து கிடங்குகள் என 2,900க்கும் மேற்பட்ட மருத்துவ கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தொடர் தாக்குதல்களால் அவசர அறுவை சிகிச்சைகள், மகப்பேறு பராமரிப்பு, புற்றுநோய் சிகிச்சை மற்றும் இன்சுலின் விநியோகம் போன்றவை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. மின் கட்டமைப்பு மீதான தாக்குதல்களால் வென்டிலேட்டர்கள், ஆப்பரேஷன் தியேட்டர்கள் மற்றும் தடுப்பூசி குளிர்பதனப் பெட்டிகள் இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது பச்சிளம் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு பெரும் ஆபத்தாக உள்ளது.

தடுப்பூசி முகாம்கள் முடங்குவது மற்றும் காசநோய் போன்ற நோய்களுக்கான சிகிச்சைகள் தடைபடுவது எதிர்காலத்தில் பெரும் சுகாதாரச் சீர்கேட்டிற்கு வழிவகுக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

போரின் தொடக்கத்திலிருந்தே இந்தியா மனிதாபிமான உதவிகளை உக்ரைனுக்கு வழங்கி வருகிறது.மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், போர்வைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் பலமுறை உக்ரைனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

உலகளவில் நடந்த போர்களை ஒப்பிடும் போது, உக்ரைனில் தான் மருத்துவ கட்டமைப்புகள் அதிகளவு சீர்குலைக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. மேலும், மருத்துவக் கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் பொதுமக்களின் உயிர்வாழும் உரிமையைப் பறிப்பதாகவும் கவலை தெரிவித்துள்ளது.

Source link