தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி மார்ச் 30ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல், நேற்று முன்தினம் (06.04.2026) மதியம் 3 மணியுடன் நிறைவு பெற்றது. இதனையடுத்து ஏப்ரல் 23ஆம் தேதி பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. மற்றொருபுறம் சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிரமாகப் பரப்புரையில் இறங்கியுள்ளன. மேலும் வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்திலும் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இத்தகைய சூழலில் தான் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சட்டமன்றத் தேர்தலுக்கான பரப்புரைப் பொதுக்கூட்டம் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நேற்று (07.04.2026) மாலை நடைபெற்றது. இதில் தி.மு.க.த் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர், “திருவாரூரில் தொடங்கி, தமிழ்நாட்டின் தெற்கு, மேற்குப் பகுதிகளில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு, இப்போது மீண்டும் டெல்டாவிற்கே அடுத்த ரவுண்டுக்காக வந்திருக்கிறேன். தமிழ்நாட்டில் மற்ற ஊருக்கெல்லாம் நான் முதலமைச்சர். ஆனால், இந்த சீர்காழியைப் பொறுத்தவரையில், நான் முதலமைச்சர் ஆவதற்கு முன்பே, உங்கள் ஊர் மாப்பிள்ளை.
ஏழாவது முறையாக திராவிட முன்னேற்றக் கழக அரசு அமைய, திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைய, உங்கள் ஊரில் பெண்ணை எடுத்த உரிமையோடு, உங்கள் ஊர் மருமகனாக வாக்கு கேட்டு வந்திருக்கிறேன். அதுமட்டுமல்ல, இங்கு கலைஞர் பிறந்த திருக்குவளை இருக்கும் நாகப்பட்டினத்தில் இருந்தும் வந்திருக்கிறீர்கள். நாகை எப்போதும், தி.மு.க. வாகை சூடும் மாவட்டம். அதேபோன்று, ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது என்று சொல்லுவார்களே. நம்முடைய மயிலாடுதுறை மாவட்டத்திலிருந்தும் வந்திருக்கிறீர்கள். நாகப்பட்டினம், மயிலாடுதுறை – இந்த இரண்டு மாவட்டத்தில் இருக்கும் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணியின் வெற்றி நூறு பர்செண்ட் உறுதி” எனத் தெரிவித்தார்.
