உங்கள் ஓட்டு மேற்கு வங்கத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்; தேர்தலுக்கு முன்னதாக பிரதமர் மோடி வேண்டுகோள்

புதுடில்லி: மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக, பிரதமர் மோடி வாக்காளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர், ‘வரும் மாதங்களில் வாக்காளர்கள் எடுக்கும் முடிவு தான் மேற்கு வங்கத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என வலியுறுத்தியுள்ளார்.

கடிதத்தில் பிரதமர் மோடி கூறி இருப்பதாவது: இன்னும் சில மாதங்களில் மேற்கு வங்கத்தின் தலைவிதி தீர்மானிக்கப்படும். எதிர்கால சந்ததியினர் எடுக்கும் முடிவை பொறுத்தது. மேற்கு வங்கத்திற்கு சேவை செய்ய வாய்ப்பளிக்க வேண்டும். அவர்களின் வலி என் இதயத்தில் கனமாக இருக்கிறது.

மேற்கு வங்கத்தை வளர்ச்சி அடைந்ததாகவும், வளமானதாகவும் மாற்றுவதற்கு நான் ஒரு தீர்மானத்தை எடுத்துள்ளேன். கடந்த 11 ஆண்டுகளில், நாட்டு மக்களின் ஆசீர்வாதங்களைப் பெற்ற பிறகு, மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளித்து வருகிறோம்.

விவசாயிகளின் நலனில் தொடங்கி, இளைஞர் சமூகத்தின் கனவுகளை நிறைவேற்றுவது அல்லது பெண்களுக்கு அதிகாரமளிப்பது, அனைத்திலும் கவனம் செலுத்தி வருகிறோம். இன்று மேற்கு வங்க மக்கள் ‘ஜன்-தன் யோஜனா’ மூலம் வங்கிச் சேவைகளைப் பெற்றுள்ளனர். ‘ஸ்வச் பாரத் அபியான்’ மூலம் மாநிலத்தில் 85 லட்சம் கழிப்பறைகளைக் கட்டுவதை நாங்கள் சாத்தியமாக்கியுள்ளோம். ரூ.2.82 லட்சம் கோடி கடன் வழங்கி தொழில்முனைவோருக்கு உதவிக்கரம் நீட்டினோம். 1 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

மேற்கு வங்கம் கடந்த ஆறு தசாப்தங்களாக தவறான நிர்வாகம் மற்றும் திருப்திப்படுத்தும் அரசியலால் மேற்கு வங்கம் ஈடுசெய்ய முடியாத இழப்புகளைச் சந்தித்துள்ளது. இந்த பாழடைந்த நிலையைக் கண்டு என் இதயம் வலிக்கிறது. ஒருபுறம், வேலைவாய்ப்பு இல்லாததால், இளைஞர்கள் மற்ற மாநிலங்களில் படிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மறுபுறம், பாதுகாப்பு இல்லாததால், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெண்கள் கவலையில் உள்ளனர்.

வரும் மாதங்களில் வாக்காளர்கள் எடுக்கும் முடிவு தான் மேற்கு வங்கத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். தொழில்மயமாக்கலில் முன்னோடியாகவும், இந்தியாவின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிப்பாளராகவும் மேற்கு வங்கம் மாற வேண்டும். மேற்குவங்கத்தில் ஊழல் இல்லாத நிர்வாகத்தை உறுதி செய்ய வேண்டும். வாக்காளர்கள் ஓட்டளிக்கும் போது அடுத்த தலைமுறையின் எதிர்காலத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Source link