தமிழ் சினிமாவிலேயே அதிக சம்பளம், அதாவது 200 கோடி வாங்கும் நடிகர் விஜய், அந்த சம்பளத்தை விட்டு அரசியலுக்கு வருகிறார் என தவெக., நிர்வாகிகள் மேடைக்கு மேடை மூச்சு விடாமல் பேசி வந்தனர். ஆனால் விஜய் நேற்று தாக்கல் செய்த வேட்புமனுவில் அவரது வருமானம் பற்றி குறிப்பிட்டுள்ளதை பார்த்து உச்சத்தை விட்டு வந்தவருக்கு மிச்சம் இவ்வளவு தானா, ஒவ்வொரு படத்திற்கும் 200 கோடி வாங்கியது என்னாச்சு என வலைதளங்களில் டிரோல் செய்து வருகின்றனர்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று ஆரம்பமானது. முதல் நாளிலேயே நடிகரும், தவெக தலைவருமான விஜய் போட்டியிடும் இரண்டு தொகுதிகளில் ஒன்றான பெரம்பூரில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அம்மனுவில் அவருடைய சொத்து விவரங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
மொத்தமாக அசையும், அசையா சொத்துக்களின் மதிப்பு 642 கோடியே 74 லட்சம் என்று காட்டியுள்ளார். அவற்றில் விவசாய நிலம், வணிக கட்டடங்கள் ஆகியவையும் அடங்கும். அது தவிர ரியல் எஸ்டேட் கம்பெனி ஒன்றையும் நடத்தி வருகிறார் என்று குறிப்பிட்டுள்ளார்..
2024 – 25ல் வருமான வரிக் கணக்கில் காட்டப்பட்ட மொத்த வருமானம் 184 கோடியே 53 லட்ச ரூபாய் என்று உள்ளது. 2023 – 24ம் ஆண்டில் 105 கோடி, 2022 – 2023ல் 198 கோடி, 2021 – 22ம் ஆண்டில் 237 கோடி, 2020 – 21ல் 8 கோடி கடந்த ஐந்து ஆண்டு வருமானம் என்று கணக்கு காட்டியுள்ளார்..
விஜய் அரசியலில் இறங்கிய பிறகு 200 கோடி ரூபாய் வருமானத்தை விட்டு வருகிறார், 500 கோடி ரூபாயை விட்டு வருகிறார் என அவரது தவெக கட்சியின் இதர தலைவர்கள் சிலரும், அவரது ரசிகர்கள் பலரும் பேசி வருகிறார்கள். குறிப்பாக அவரது கட்சியின் உயர்மட்ட நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.எ.செங்கோட்டையன், “ஆண்டுக்கு 500 கோடி ரூபாய வருமானத்தை தூக்கி எறிந்துவிட்டு மக்களுக்கு சேவை செய்ய வந்துள்ளார் விஜய்,” என்று கோவையில் செய்தியாளர்களிடம் பேசியிருந்தார்.
ஆனால், விஜய்யின் வேட்பு மனுவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரே ஒரு முறை 200 கோடிக்குக் கூடுதலாகவும், மூன்று முறை 200 கோடிக்குக் குறைவாகவும், ஒரு முறை வெறும் 8 கோடி ரூபாய் மட்டுமே வருமானம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வருமான வரிக் கணக்கு, வேட்பு மனுவில் தாக்கல் செய்யப்பட்ட உறுதி மொழிப் பத்திரப்படி பார்த்தால் அவரது வருட வருமானம் 500 கோடி இல்லை என்பது உறுதி ஆகிறது. 500 கோடியை விட்டு வருகிறார் என்று தனது கட்சியினர் பேசியதற்கு விஜய் இதுவரை எந்த ஒரு எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை.

விஜய் கடந்த சில வருடங்களில் நடித்த படங்களில் அவருக்கான சம்பளம் ஒரு படத்திற்கு 200 கோடி ரூபாய் என பல செய்திகள், சமூக வலைத்தளப் பதிவுகள் வெளிவந்தன. திரையுலக வட்டாரங்களிலும் ‘வாரிசு, லியோ, ஜனநாயகன்’ ஆகிய படங்களுக்கு அவருக்கு 200 கோடி ரூபாய் அளவில் சம்பளம் தரப்பட்டது என்று சொன்னார்கள். ரஜினிகாந்த்தை விடவும் அதிக சம்பளம், தென்னிந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் ஒரே நடிகர் என அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பெருமை பொங்க பதிவிட்டார்கள்.
அவர் தாக்கல் செய்த கணக்கு விவரங்கள் உண்மையா அல்லது அவரது தவெக கட்சியினர் பேசுவது உண்மையா என்ற சந்தேகம் வாக்காளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இது குறித்து சமூக வலைத்தளங்களில் பலரும் பல்வேறு விதமான கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பியுள்ளனர்.
இனி விஜய் ரசிகர்கள் அவரது சம்பளம் குறித்து பேசினாலோ, அவரது கட்சியின் 500 கோடி ரூபாய் வருமானத்தை விட்டு மக்கள் சேவை செய்ய வந்துள்ளார் என்று பேசினாலோ இதர சினிமா ரசிகர்களும், வாக்காளர்களும் சிரித்து விட்டு மட்டும் கடந்து போக மாட்டார்கள், ‘டிரோல், மீம்ஸ்’ என கலாய்க்கவும் ஆரம்பித்துவிடுவார்கள்.
