மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்துள்ள திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) திருத்த மசோதா 2026, இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இந்த மசோதாவை தாக்கல் செய்யும்போது இந்தியாவின் சமூக நீதித்துறை அமைச்சர் வீரேந்திர குமார் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது, “ 2019-ம் ஆண்டு சட்டத்தில் இருந்த ‘திருநங்கை’ என்ற வரையறை மிகவும் விரிவானதாகவும், தெளிவற்றதாகவும் இருந்தது. இதனால், உண்மையான பலன்களைப் பெற வேண்டியவர்களைக் கண்டறிவதில் சிக்கல் இருக்கிறது. எனவே, `உண்மையிலேயே சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாகும் நபர்களை’ மட்டும் அடையாளம் காண இந்தத் திருத்தம் அவசியம்.
சுய-அடையாளம் (Self-identification) என்ற முறையில் எவர் வேண்டுமானாலும் தங்களைத் திருநங்கை என்று கூறிக்கொள்ள வாய்ப்புள்ளது. இதன் மூலம் அரசின் சலுகைகளைத் தவறானவர்கள் தட்டிச் செல்ல வாய்ப்புள்ளதாக அஞ்சுகிறோம். எனவே, ஒருவர் தன்னைத் திருநங்கை என்று அடையாளப்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பிக்க வேண்டும். இந்த மசோதாவின்படி, ஒரு மருத்துவக் குழுவின் பரிசோதனைக்குப் பிறகே ‘திருநங்கை’ என்ற சான்றிதழ் வழங்கப்படும்.
குழந்தைகள் அல்லது பெரியவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டு அல்லது வற்புறுத்தலின் பேரில் பாலின மாற்ற அறுவை சிகிச்சைக்கோ அல்லது திருநங்கை அடையாளத்தை ஏற்பதற்கோ உள்ளாக்கப்படுவதைத் தடுக்கவே இந்த மசோதா கொண்டு வரப்படுகிறது.” என்றார்.
இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய திருநர் கவுன்சிலின் (NCTP) உறுப்பினர்களான கல்கி சுப்பிரமணியம், ரிதுபர்ணா நியோக் ஆகியோர் மார்ச் 26 அன்று தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். தொடர்ந்து சமூக ஆர்வலர்களும் எதிர்ப்புகளைப் பதிவுசெய்து வருகின்றனர்.
இந்த நிலையில், மசோதாவில் இருக்கும் சிக்கல் குறித்து விரிவாகப் பேச திருநர் சமூகச் செயல்பாட்டாளரும், நடிகையுமான நேஹாவிடம் பேசினோம்.
“ஒருவர் தன்னைத் திருநங்கை என்று அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டுமென்றால், அதற்கு ஒரு மருத்துவக் குழுவின் சான்றிதழ் கட்டாயம் என்பது அடிப்படை மனித உரிமை மீறல். ஓர் ஆணோ, பெண்ணோ தங்களை நிரூபிக்க இப்படி உடல் ரீதியான சோதனைகளுக்கு உள்ளாக்கப்படுவதில்லை. ஆனால், திருநங்கைகளை மட்டும் அவர்களின் உறுப்புகளைப் பரிசோதித்துச் சான்றிதழ் வழங்குவது என்பது மிகப்பெரிய அவமானம். ‘சுய-அடையாளம்’ என்பது மனரீதியானது, அது உடல் உறுப்பு சார்ந்தது மட்டுமல்ல என்பதை இந்த அரசு உணர்வதே இல்லை.
அமெரிக்காவின் ட்ரம்ப் அரசு செய்த தவறுகளை அப்படியே காப்பி அடித்து இந்தியாவிலும் அமல்படுத்தப் பார்க்கிறார்கள். குறிப்பாக, தமிழ்நாட்டில் ‘திருநங்கை’ என்ற கண்ணியமான பெயர் புழக்கத்தில் உள்ளது. ஆனால், இந்த மசோதா ‘ஹிஜ்ரா’, ‘அரவாணி’ போன்ற மதம் சார்ந்த பெயர்களை மட்டுமே முன்னிறுத்துகிறது. இது கிறிஸ்தவ அல்லது இஸ்லாமிய சமூகத்திலிருந்து வரும் திருநங்கைகளையும், நாத்திகர்களையும் புறக்கணிக்கும் செயலாகும்.

திருநங்கைகள் மற்றவர்களைக் கடத்தி வலுக்கட்டாயமாகத் தங்கள் சமூகத்தில் சேர்க்கிறார்கள் என்ற அரசின் வாதம் முற்றிலும் ஆதாரமற்றது. அது அவர்களுக்குள் ஏற்படும் உணர்வுப் போராட்டம். உயிருக்குப் பயந்து ஓடி வரும் இளம் திருநங்கைகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் மூத்த திருநங்கைகளை ‘கடத்தல்காரர்கள்’ என முத்திரை குத்தி, அவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்க இந்தச் சட்டம் வழிவகை செய்கிறது. இது பெற்றோர்களும், போலீஸாரும் எங்களை மேலும் ஒடுக்கவே உதவும்.
நாடாளுமன்றத்தின் வாசலில் திருநங்கைகள் போராடிக் கொண்டிருந்தபோது, அவர்களின் குரலை கேட்காமல் அவசர அவசரமாகக் குரல் வாக்கெடுப்பு மூலம் இதை நிறைவேற்றியது ஜனநாயகப் படுகொலை.
எந்த ஒரு மனநல மருத்துவர், ஆய்வாளர் அல்லது திருநங்கை சமூகப் பிரதிநிதிகளின் ஆலோசனையையும் அரசு பெறவில்லை. இது ஒரு சமூகத்தின் அடையாளத்தை அழிக்கும் முயற்சி. `எங்கள் உடலையும், வாழ்வையும் தீர்மானிக்க எங்களுக்குத்தான் உரிமை உண்டு’ என்ற முழக்கத்துடன் உச்ச நீதிமன்றத்தை நாடத் தயாராகி வருகிறோம்” என்றார்.

தொடர்ந்து திருநர் சமூகத்தின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வரும் கவிஞரும் எழுத்தாளருமான அக்னி பிரதீப்பிடம் பேசியபோது, “அவரவர் பாலின அடையாளத்தை அவர்களே தீர்மானிக்கும் நல்சா (NALSA) தீர்ப்பு 2014 உரிமையை இந்த மசோதா மறுக்கிறது. இந்திய அரசியலமைப்பின் பிரிவு 21 படி சுய அடையாளம் என்பது அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதை இந்த சட்ட திருத்தம் மீறுகிறது.
திருநர்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளுக்கு கடுமையான சட்டங்களோ தண்டனைகளோ இதில் வரையறுக்கப்படவில்லை.
கடந்த காலங்களில் திருநர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை பதிவு செய்யும்போது, காவல் நிலையங்களிலேயே ‘நீங்கள் பெண்களா?’ என்ற கேள்வி எழுப்புவார்கள். பல சட்டப் போராட்டங்களுக்குப் பிறகே புகார்கள் பதிவு செய்ய முடிகிறது.
இந்த மசோதாவில், திருநர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக்கு அதிகபட்சம் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது. இந்த வேறுபாடு குறித்து இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் இணைச் செயலாளர், ‘பெண்களின் உடல் அமைப்பும் திருநர்களின் உடல் அமைப்பும் வேறுபட்டவை’ என்ற விளக்கத்தை அளித்துள்ளார்.

அதாவது, திருநர்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் இங்கே முறையாக அணுகப்படுவதில்லை. அதுவே ஒரு பெரிய பாகுபாடு. பிறரை கட்டாயப்படுத்தி திருநராக மாற்றுவோருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை வழங்கப்படும் என மசோதா குறிப்பிடுகிறது. அப்படி மாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. அதற்கான ஆதாரங்களும் இல்லை. இருந்தாலும் அதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், திருநர்களின் முன்னேற்றத்திற்கான கல்வி, வேலைவாய்ப்பு, இட ஒதுக்கீடு போன்ற அடிப்படை அம்சங்கள் குறித்து எந்த கட்டாய வழிகாட்டுதலும் இதில் இல்லை. மருத்துவர்களுக்கே திருநர் உடல் மற்றும் பாலின அடையாளம் குறித்து முழுமையான புரிதல் இல்லாத சூழலில், அவர்களே அடையாளத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதே தவறான அணுகுமுறை.
இது திருநர் அடையாளத்தை ஒரு ‘நோய்’ என்ற பார்வையில் கட்டமைக்கும் அபாயத்தையும் உருவாக்குகிறது. திருநர்களுக்கு எதிரான வார்த்தை வன்முறைகள் குறித்தும் தெளிவான சட்ட வரையறைகள் இதில் இல்லை. எனவே, பெயருக்குத்தான் இது ஒரு பாதுகாப்புச் சட்டம். ஆனால் நடைமுறையில், திருநர்களை இது பாதுகாக்கவில்லை” எனத் தனது கவலையை வெளிப்படுத்தினார்.

திருநர் உணர்வுகள் குறித்து தெளிவுபெற SCARF நிறுவனத்தின் இளைஞர் மனநலத் துறைத் தலைவரும், முதுநிலை மனநல மருத்துவருமான சிவ பிரகாசனிடம் பேசினோம். அவர், “முதலில் திருநங்கைத் தன்மை என்பது ஒரு நோயோ அல்லது குறைபாடோ அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். உலகத்தை நாம் எப்படிப் பார்க்கிறோம், அனுபவிக்கிறோம் என்பதில் இருக்கும் ஒரு மாற்றம் இது. பாலின அடையாளம் என்பது உடல் சார்ந்ததா அல்லது மனம் சார்ந்ததா என்ற கேள்விக்கே இடமில்லை.
நம் ஒவ்வொருவருக்கும் மூளையில் `என் உடல் எப்படி இருக்கிறது?’ என்பது குறித்த ஒரு பிம்பம் இருக்கும். ஒருவரின் மனரீதியான அந்தப் பிம்பமும், அவரின் உடல் அமைப்பும் எப்போது முரண்படுகிறதோ, அப்போதுதான் இந்த அடையாளம் குறித்த சிக்கல் ஆரம்பிக்கிறது. எனவே, இது மனரீதியான உணர்வு மற்றும் உடல் ரீதியான வெளிப்பாடு ஆகிய இரண்டின் கலவை.
ஏற்கெனவே சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டு வரும் திருநங்கைகளுக்கு, தற்போது மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் சட்டத் திருத்தம் கூடுதல் தடையை உருவாக்கும். தங்களின் அடையாளத்தை நிரூபிக்க வேண்டும் என்ற கட்டாயம் அவர்களுக்குள் தேவையற்ற பதற்றத்தையும், மன அழுத்தத்தையும் உண்டாக்கும்.

ஒருவேளை ஒரு மருத்துவர் அவர்களின் உணர்வை அங்கீகரிக்க மறுத்தால், அது அந்த நபரை மீண்டும் ஒரு சமூக முடக்கத்திற்குத் தள்ளும். இது அவர்களைப் பாதுகாப்பற்ற முறையிலான ஹார்மோன் சிகிச்சைகளைத் தேடிச் செல்லத் தூண்டும் அபாயமும் உள்ளது.
பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய, பாதிப்புக்குள்ளாகக்கூடிய நிலையில் இருப்பவர்களைச் சிலர் மேனிபுலேட் (Manipulate) செய்ய வாய்ப்பு உள்ளது. ஆனால், எனது 12 ஆண்டுக்கால அனுபவத்தில் இது போன்ற நேரடியான பாதிப்புகள் எதையும் நான் பார்த்ததில்லை. எனவே, ஒருவர் பாலின மாற்றம் குறித்த முடிவை எடுப்பதற்கு முன், போதுமான கால அவகாசம் கொடுத்து, முறையான ஆலோசனைக்கு உட்படுத்துவது சரியாக இருக்கும்.
எனவே, சுய-பாலின அடையாளம் ஒருவரின் உரிமையாக இருக்க வேண்டும். அதே சமயம், அவர்கள் சரியான முடிவை எடுக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்தத் தேவையான மருத்துவ மற்றும் மனநல ஆதரவை அரசு வழங்க வேண்டுமே தவிர, அதை ஒரு தடையாக மாற்றக் கூடாது” எனத் தெளிவாகப் பேசினார்.
இந்த விவகாரம் குறித்து அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜெயராமனிடம் பேசினோம். அவர், “ஒரு நபர் திருநங்கையா என்பதை மருத்துவ ரீதியாக உறுதிப்படுத்தப் பல கட்டப் பரிசோதனைகள் உள்ளன. ரத்தப் பரிசோதனை மூலம் ஹார்மோன் அளவுகளைக் கண்டறிவது, மரபணு (Genetic/Chromosome) சோதனை செய்வது, எலும்பு மஜ்ஜை சார்ந்த ஆய்வுகள் மூலம் ஒருவரின் உடற்கூறியல் பின்னணியைப் புரிந்துகொள்ள முடியும்.

பொதுவாக, பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்பாக ஹார்மோன் சிகிச்சைகள் வழங்கப்பட்டு, உடல் அந்த மாற்றங்களுக்கு எவ்வாறு ஒத்துழைக்கிறது என்பதும் கண்காணிக்கப்படும். உடல் ரீதியாக ஒரு பாலினமாகவும், மனரீதியாக மற்றொரு பாலினமாகவும் உணரும் நபர்களில், மனரீதியான உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். மனதளவில் தங்களைத் திருநங்கைகளாக உணரும் நபர்களுக்கும் ஹார்மோன் நிலைகள் மற்றும் மரபணு சோதனைகள் மூலம் உரிய மருத்துவ வழிகாட்டுதல்களை வழங்க முடியும். அரசின் மசோதாவில், ‘வற்புறுத்தலின் பேரில் பாலின மாற்றம் செய்யப்படுவதைத் தடுக்கவே மருத்துவச் சான்றிதழ் கேட்கப்படுகிறது’ என்ற வாதம் ஏற்புடையது அல்ல. யாரையும் வற்புறுத்தி ஓர் அடையாளத்தை ஏற்க வைக்க முடியாது.
ஒருவேளை மிரட்டல் அல்லது வற்புறுத்தல் இருப்பதாகச் சந்தேகம் எழுந்தால், அந்த நபரின் மரபணு ரீதியான தரவுகள் மற்றும் விரிவான மருத்துவப் பின்னணியைச் சோதிப்பதன் மூலம் உண்மைத் தன்மையைக் கண்டறிய வாய்ப்பு உள்ளது. எனவே, அரசு நடைமுறைப்படுத்த விரும்பும் மருத்துவச் சான்றிதழ் முறை, அறிவியல் ரீதியாகச் சாத்தியம் என்றாலும், அது ஒரு நபரின் தனிப்பட்ட உணர்வுகளைச் சிதைக்காமல் இருப்பதை உறுதி செய்வது அவசியம்” என்றார்.
