உட்கட்சி பூசலால் உடையும் காங்கிரஸ் கோட்டைகள்; கர்நாடகாவை தொடர்ந்து ஹிமாச்சலிலும் சிக்கல்

கர்நாடகாவில், முதல்வர் நாற்காலியை குறிவைத்து ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் நடக்கும் போட்டா போட்டியை போல, ஹிமாச்சல பிரதேசத்திலும் உட்கட்சி பூசல் தலைதுாக்க துவங்கி உள்ளது. தெலுங்கானாவிலும் கட்சிக்குள் புகைச்சல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், எஞ்சியிருக்கும் மூன்று மாநிலங்களிலும் காங்கிரசிடம் இருந்து ஆட்சி கைநழுவிப்போகும் நிலை உருவாகி உள்ளது.

கடந்த 2014ல் மத்தியில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தது முதல், காங்கிரஸ் கட்சிக்கு சரிவு காலம் ஆரம்பித்தது.

தற்போதைய தேதியில் தெற்கில் தெலுங்கானா, கர்நாடகா, வடக்கில் ஹிமாச்சல பிரதேசத்தில் மட்டுமே, காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருக்கிறது.

இதில் வேடிக்கை என்னவெனில், உட்கட்சி பூசல், பதவி சண்டை உள்ளிட்ட காரணங்களால், மிச்சம் இருக்கும், மூன்று மாநிலங்களிலும் ஆட்சி கை நழுவிப் போகும் சூழல் காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ளது.

இழுபறி

கர்நாடகாவை பொறுத்த வரை, முதல் இரண்டரை ஆண்டுகள் சித்தராமையாவும், இறுதி இரண்டரை ஆண்டுகள் சிவக்குமாரும் முதல்வர் பதவியில் அமர வேண்டும் என்ற ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 2023ல் ஆரம்பித்த இந்த இழுபறி தற்போது கிளைமாக்ஸை எட்டி இருக்கிறது.

ஒருபுறம் சிவக் குமார் ஆதரவாளர்கள், சித்தராமையாவுக்கு எதிராக குரல் எழுப்ப, மறு புறம் முதல்வர் நாற்காலியை விட்டு தராமல் சித்தராமையா முரண்டு பிடித்து வருகிறார். இதனால், கர்நாடகாவில் உட்கட்சி பூசல் உச்சகட்டத்தை எட்டி உள்ளது.

கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு பின், மத்திய பிரதேசத்தில் ஜோதிராதித்ய சிந்தியா மொத்தமாக தன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுடன் பா.ஜ.,வுக்கு தாவி கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு செக் வைத்தார்.

அதே போல, கர்நாடகாவிலும் பா.ஜ., காய்களை நகர்த்தினால், காங்கிரஸ் நிச்சயம் ஆட்சியை இழக்கும் சூழல் ஏற்படும். அடுத்ததாக தெலுங்கானா. இம்மாநிலத்தில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான அரசு ஸ்திரமாக இருப்பதாக தெரிந்தாலும், எரிமலை போல அதிருப்தி கோஷ்டிகள் உள்ளுக்குள் குமுற ஆரம்பித்துள்ளன.

அடுத்த மாதம் அம்மாநிலத்தில் நடக்கும் உள்ளாட்சி தேர்தலில், 90 சதவீத வெற்றியை பதிவு செய்வோம் என ரேவந்த் ரெட்டி சவால் விடுத்துள்ளார். முன்னாள் முதல்வரான சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்ட்ர சமிதியும், பா.ஜ.,வும் ஒன்றாக கைகோர்த்தால், ரேவந்த் ரெட்டியின் கணக்குகள் சுக்குநுாறாகிவிடும். இதனால், அம்மாநிலத்திலும் காங்கிரசின் பிடி தளர்ந்துவிட நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.


மோதல் தணியவில்லை

ஹிமாச்சல பிரதேசமும் காங்கிரசுக்கு சோதனை காலத்தை துவக்கி வைத்துள்ளது. இம்மாநிலத்தை பொறுத்தவரை மக்களிடம் அதிக செல்வாக்கு பெற்றவர் காங்கிரஸ் மூத்த தலைவரான வீரபத்ர சிங். 2021ல் இவர் மறைந்த பின், கட்சி பொறுப்பை அவரது மனைவி பிரதிபா சிங் ஏற்றார்.

மகன் விக்ரமாதித்யா காங்கிரஸ் அரசில் அமைச்சரானார். ஆனால், சிம்லாவில் தந்தை வீரபத்ர சிங்கின் சிலையை நிறுவுவதில், விக்ரமாதித்யாவுக்கும், முதல்வர் சுக்விந்தர் சிங் சுகுவுக்கும் இடையே பிரச்னை வெடித்தது.

பதறிப் போன காங்., மேலிடம் இருவரையும் சமாதானப்படுத்தி ஒரு வழியாக வீரபத்ர சிங்கின் சிலையை அமைத்தது. ஆனாலும், இவர்களுக்குள் ஏற்பட்ட மோதல் தணியவில்லை. ஒரு புறம் வீரபத்ர சிங்கின் விசுவாசிகள் அவரது மகன் விக்ரமாதித்யாவுக்கு ஆதரவாக பல்லக்கு துாக்க, மறு புறம் முதல்வர் சுகுவுக்கு எதிராக கட்சிக்குள்ளேயே கோஷ்டி மோதல் வெடிக்க ஆரம்பித்துள்ளது.

வரும் 2027ல் ஹிமாச்சலில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள சூழலில், கட்சி தலைவர்களுக்குள் ஏற்பட்ட இந்த மோதல், பா.ஜ.,வுக்கு சாதகமாகி வருகிறது.

கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் இந்த பூசல்களை காங்., மேலிடம் முறியடிக்குமா? அல்லது பிரச்னைகளை தீர்க்க முடியாமல் திணறுமா? என்பது அடுத்து வரும் மாதங்களில் தெரிந்துவிடும்.

– நமது சிறப்பு நிருபர் –

Source link