புதுடில்லி:உணவு பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு தேவையான, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., எனப்படும் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் உரிமங்கள் மற்றும் பதிவு சான்றிதழ்களை இனி புதுப்பிக்க தேவை இல்லை, அவை நிரந்தரமாக செல்லும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது.
உணவு சார்ந்த தொழில்கள் செய்வதை எளிதாக்கும் வகையில் இந்த அதிரடி சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இது குறித்து எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., விடுத்துள்ள அறிக்கை:
உணவு தொழில் செய்வோர் தங்களது உரிமங்கள் மற்றும் பதிவு சான்றிதழ்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் புதுப்பிக்க வேண்டிய அவசியம் இனி இல்லை. ஒருமுறை பெற்றால் அது நிரந்தரமாக செல்லும் வகையில், நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த சீர்திருத்தத்தால், உணவு தொழில் முனைவோர் அடிக்கடி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டிய சுமை குறையும்.
வருவாய் வரம்பு உயர்வு எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., பதிவுக்கான ஆண்டு வருவாய் வரம்பு 12 லட்சம் ரூபாயிலிருந்து 1.5 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த புதிய விதிமுறை ஏப்., 1 முதல் அமலுக்கு வரும். இதன் வாயிலாக சிறு மற்றும் குறு நிறுவனங்களை துவக்குவதற்கான விதிமுறைகள் குறையும். முன்கூட்டிய ஆய்வு தவிர்க்கப்படும். உடனடி பதிவு கிடைக்கும். இதனால், சிறு, குறு தொழில் துவங்குவது எளிமையாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
