“உண்மைகளை பேச முடியாத…” – சாத்தான்குளம் தீர்ப்பு குறித்து சுதா கொங்கரா

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தபோது ஜூன் 19ஆம் தேதி கடையை மூடாததால் செல்போன் கடை வைத்திருந்த தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரை போலீசார் விசாரணைக்காக காவல் நிலையத்திற்குள் அழைத்துச் சென்றனர். அப்போது அவர்கள் இருவர் மீதும் போலீசார் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதனையடுத்து இருவரும் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து தந்தையும் மகனும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அச்சமயத்தில் இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் கட்சிகளும் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டங்களை நடத்தின. இந்த சம்பவத்தில் அப்போதைய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட ஒன்பது காவலர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்ட நிலையில் 2,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வந்த இந்த வழக்கில் கடந்த மார்ச் 23ஆம் தேதி தீர்ப்பு வெளியானது. குற்றம் சாட்டப்பட்ட 9 போலீசாரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டது. பின்பு அவர்களுக்கு இரட்டை மரண தண்டனையும் விதிக்கப்பட்டது. 

இந்த வழக்கில் முக்கிய சாட்சியமாக இருந்தவர் தலைமைக் காவலர் ரேவதி. முதலில் இவ்வழக்கை விசாரிக்க சென்ற நீதிபதி பாரதிதாசனிடம் தைரியமாக நான் நடந்ததையெல்லாம் சொல்கிறேன், என்னுடைய இரண்டு பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்கும் என் வேலைக்கும் உங்களால் உத்தரவாதம் கொடுக்க முடியுமா? என முன்வந்தார். பின்பு யார் யார் அடித்தார், எப்படியெல்லாம் அடித்தார்கள் அதாவது இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.க்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் தொடங்கி அடித்த அத்தனை பேரையும் சொன்னார். மேலும் டேபிள் மேல் இருவரையும் குப்புறப் படுக்க போட்டு கயிற்றால லாடம் கட்டி அப்பா முன் மகனையும் மகன் முன் அப்பாவையும் அடித்தது என எல்லாவற்றையும் விவரித்தார். இதனால் அவர் மிரட்டலுக்கும் ஆளானார். ஆனாலும் நேர்மையோடு கடைசி வரை நின்று நேரில் பார்த்த சாட்சியாக வாக்குமூலம் கொடுத்தார். இவ்வளவு நெருக்கடிகளிலும் சக காவலர்கள் தவறு செய்தாலும் அது தவறு தான் என அவர் நின்ற நேர்மையை பலரும் பாராட்டி அவருக்கு ஆதரவாக நின்றனர். 

இந்த நிலையில் வழக்கில் தீர்ப்பு வந்தது தொடர்பாக ரேவதியை மீண்டும் நினைவுகூர்ந்து பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் சுதா கொங்கரா, “துன்புறுத்தலுக்கு ஆளாகிவிடுவோமோ என்ற அச்சத்தால், (எனக்கு நானே உதவிக் கொள்வதற்காகக்கூட) பல உண்மைகளை வெளிப்படையாகப் பேச முடியாத என்னைப் போன்ற ஒரு பெண்ணுக்கு, வேறொருவரைப் பாதுகாப்பதற்காக உண்மையை உரக்கப் பேசும் துணிச்சலைக் கொண்ட உங்களைப் போன்ற ஒரு பெண், ஒரு ‘உண்மையான வீராங்கனை’ ஆவார். உங்களுக்கு என் பணிவான வணக்கம்” எனக் குறிப்பிட்டுள்ளார். 



Source link