உதயநிதி முதல்வராவது கனவிலும் நடக்காது: பிரசாரத்தில் பழனிசாமி ஆவேசம்

நாகர்கோவில்: ”உதயநிதியை முதல்வர் நாற்காலியில் அமர வைக்கவே ஸ்டாலின் பாடுபடுகிறார். அது கனவிலும் நடக்காது” என அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேசினார்.

கன்னியாகுமரி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் தளவாய் சுந்தரத்தை ஆதரித்து, ஆரல்வாய்மொழியில் நடந்த பிரசாரத்தில் பழனிசாமி பேசியதாவது:

அரச பரம்பரை விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுத்தது அ.தி.மு.க., அரசு. புயல் பாதிப்பில் இறந்த மீனவர்களின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கினோம். புயல் பாதிப்புகளை புயல் வேகத்தில் சரி செய்து தடையில்லா மின்சாரம் வழங்கினோம்.

மக்கள் செல்வாக்கை இழந்த தி.மு.க., அரசு, அவசர கதியில் கல்லுாரி மாணவர்களுக்கு தரமற்ற லேப்டாப் வழங்கியுள்ளது. இதில் ஊழல் நடைபெற்றிருந்தால், அ.தி.மு.க., அரசு அமைந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும்.

உதயநிதியை முதல்வர் நாற்காலியில் அமர வைக்கவே ஸ்டாலின் பாடுபடுகிறார். அது கனவிலும் நடக்காது. கருணாநிதிக்கு பின் ஸ்டாலின், அதன் பின் உதயநிதி. இப்படிப்பட்ட அரச பரம்பரைக்கு, இந்த தேர்தல் முற்றுப்புள்ளி வைக்கும்.

தி.மு.க., அரசு வந்த பின், சொத்து வரி 100 சதவீதம், கடைகளுக்கான வரி 150 சதவீதம், மின் கட்டணம் 52 சதவீதம் உயர்ந்துள்ளது.

குப்பையை கூட இவர்கள் விட்டு வைக்கவில்லை. அதற்கும் வரி போடுகின்றனர். அரசுக்கு வருமானம் உயர்ந்த பின்பும், 5 ஆண்டுகளில், 5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளனர்.

ஆனால், புதிய திட்டங்கள் ஏதும் வரவில்லை. தமிழகம், இன்று தலை குனிந்துள்ளது. தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை குற்றங்கள் நடக்காத நாளே இல்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

காப்பியடித்த தி.மு.க., இதைத் தொடர்ந்து, திருநெல்வேலியில் நடந்த பிரசார கூட்டத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேசுகையில், ”அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் குடும்பத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளோம்.

”இதை காப்பியடித்து தி.மு.க., மகளிருக்கு 8,000 ரூபாய்க்கு கூப்பன் வழங்குவோம் என்கின்றனர். கூப்பன் வழங்கினால், அதில் கமிஷன் அடிக்கலாம். அந்த கூப்பனை தி.மு.க.,காரர்கள் தானே வழங்குவர். ஸ்டாலின் மாடல் அரசு பெயிலியர் மாடல் அரசு,” என்றார்.

வாகன சோதனை! நேற்று மதியம் நாகர்கோவில் ஹோட்டலில் தங்கியிருந்த பழனிசாமி, மாலையில் ஆரல்வாய்மொழி பிரசார கூட்டத்திற்கு புறப்பட்டார். ஒழுகினசேரி அப்டா மார்க்கெட் அருகே வந்தபோது தேர்தல் பறக்கும் படையினர் அவரது வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர்.

Source link