ஈரான்-அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையிலான போரின் காரணமாக ஹார்மோஸ் நீரிணை பாதை மூடப்பட்டுள்ளது. இதனால், எண்ணெய் கப்பல்கள் இந்த பாதையைக் கடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, உலக அளவில் கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் 20 சதவீதம் தடைப்பட்டுள்ளது. இதனால், உலக சந்தையில் கச்சா எண்ணெய் வரத்து குறைந்துள்ளது. எனவே, எண்ணெய் கடுமையான விலை உயர்வைக் கண்டுள்ளது. இதனால், உலகின் பல்வேறு நாடுகள் மிகப் பெரிய அளவிலான எரிபொருள் தட்டுப்பாட்டைச் சந்தித்து வருகின்றன.
இதன் நீட்சியாக பிலிப்பைன்ஸ் நாட்டில் அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் எரிபொருள் பெறுவதற்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் போன்ற நாடுகளிலும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்தியாவில் ஏற்கனவே எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, எரிவாயு விலை உயர்வைக் கண்டுள்ளது.
இதனிடையே, ரஷ்யாவும் இன்று (01-04-26) முதல் நான்கு மாதங்களுக்கு எரிபொருள் ஏற்றுமதிக்குத் தடை விதித்துள்ளது. இதன் காரணமாக, ஐரோப்பிய நாடுகளுக்கும் எரிபொருள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், ஐரோப்பிய நாடுகளும் பெரும் நெருக்கடியைச் சந்திக்க இருக்கிறது. ஏற்கனவே, அமெரிக்கா அதிபர் ட்ரம்ப், ஹார்மோஸ் நீரிணையைத் திறக்க உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், எந்த நாடும் இதற்கு முன் வரவில்லை. இதையடுத்து, அமெரிக்காவே முயற்சி செய்து இந்த நீரிணையைத் திறக்கும் என்று சவால் விடுத்திருந்தார். ஆனால், அது முடியவில்லை.
இந்நிலையில், இந்த நீரிணை பாதையைக் கடக்க தங்களிடம் அனுமதி பெற வேண்டும் என்றும், அவ்வாறு அனுமதி பெறாமல் செல்லும் கப்பல்கள் தாக்கப்படும் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது. சொன்னது போலவே, ஏற்கனவே பல கப்பல்களைத் தாக்கியும் உள்ளது. இந்நிலையில், தங்களுக்கு உதவ முன் வராத உலக நாடுகளுக்கு ட்ரம்ப் சமூக வலைத்தள பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘எரிபொருள் விலை உயர்வால் அதிருப்தி அடைந்துள்ள நாடுகள் தாங்களாகவே சண்டையிட்டு எண்ணெய்யைப் பெற்றுக்கொள்ளுங்கள். மேலும், எங்களிடம் அதிகமான எண்ணெய் உள்ளது. வேண்டுமானால் எங்களிடமிருந்து வாங்கிக் கொள்ளுங்கள்’ என்று தெரிவித்துள்ளார்.
