உத்தர பிரதேச எம்.எல்.சி தேர்தல்; பிரதமர் மோடியின் தொகுதியில் பாஜக தோல்வி

உத்தரப் பிரதேச சட்ட மேலவைத் தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடியின் நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசியில் சமாஜ்வாடி கட்சி வெற்றி பெற்றுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், 11 சட்ட மேலவைத் தொகுதிகளுக்கு கடந்த 23-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. இதில், பட்டதாரிகளுக்கான லக்னோ, வாரணாசி, ஆக்ரா, மீரட், அலகாபாத்-ஜான்சி ஆகிய 5 தொகுதிகளும், ஆசிரியர்களுக்கான லக்னோ, வாரணாசி, ஆக்ரா, மீரட், பரேலி-மொராதாபாத், கோரக்பூர்- பைசாபாத் ஆகிய 6 தொகுதிகளும் அடங்கும்.

சமாஜ்வாடி கட்சி வெற்றி

இந்த 11 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. காலை நிலவரப்படி, பா.ஜ.க. 5 தொகுதிகளிலும், சமாஜ்வாடி கட்சி 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இதில், பிரதமர் நரேந்திர மோடியின் நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசியில் உள்ள ஆசிரியர் தொகுதியில், பா.ஜ.க. வேட்பாளரைத் தோற்கடித்து சமாஜ்வாடி கட்சியின் லால் பிஹாரி வெற்றி பெற்றுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடியின் தொகுதியிலேயே பா.ஜ.க. தோல்வியைச் சந்தித்திருப்பது அக்கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source link