உயர் அதிகாரி உத்தரவிட்டால் அடித்து கொலை செய்வீர்களா? 'மடப்புரம் வழக்கில் போலீசார் செய்தது மன்னிக்க முடியாத குற்றம்'என நீதிபதி காட்டம்

மதுரை: ‘உயர் அதிகாரி ஒருவர் அடிக்க சொல்லி உத்தரவிட்டால், நீங்கள் அடித்துக் கொலை செய்வீர்களா? அடிக்க முடியாது என்று ஒருவர் கூட ஏன் மறுக்கவில்லை. சட்டவிரோதமாக செயல்பட முடியாது என, உயர் அதிகாரியிடம் சொல்லுங்கள்.

‘உங்கள் மீது நடவடிக்கை எடுத்தால், நீதிமன்றத்திற்கு வாருங்கள். நீதிமன்றம் உங்களை பாதுகாக்கும்’ என, மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கில், போலீசார் மீது கடும் அதிருப்தியை பதிவு செய்த உயர் நீதிமன்ற நீதிபதி, போலீசாரின் ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்தார்.

விசாரணை

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு வந்த பேராசிரியை நிகிதா, தன் காரில் நகை திருடுபோனது குறித்து திருப்புவனம் போலீசில் புகார் செய்தார். இது சம்பந்தமாக, கோவில் காவலாளி அஜித்குமாரை விசாரணை என்ற பெயரில் தனிப்படை போலீசார் தாக்கியதில், அவர் இறந்தார்.

இவ்வழக்கை சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. போலீஸ்காரர்கள் கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கரமணிகண்டன், போலீஸ் வேன் டிரைவர் ராமச்சந்திரன் கைது செய்யப்பட்ட நிலையில், மானாமதுரை டி.எஸ்.பி., சண்முகசுந்தரம், திருப்புவனம் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், சிறப்பு எஸ்.ஐ., சிவக்குமார், ஏட்டு இளையராஜா கூடுதல் எதிரிகளாக வழக்கில் சேர்க்கப்பட்டனர்.

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடக்கிறது. டி.எஸ்.பி.,யின் முன்ஜாமின் மனுவை, ஜன., 7ல் உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.

ஆனந்த், சங்கரமணிகண்டன், ராஜா, பிரபு உயர் நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்தனர். அதற்கு, அஜித்குமாரின் தாய் மாலதி ஆட்சேபனை தெரிவித்து, இடையீட்டு மனு தாக்கல் செய்தார்.

நேற்று, நீதிபதி எஸ்.ஸ்ரீமதி முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதி, ‘நகை திருட்டு தொடர்பான புகார் என்னாச்சு?’ என, கேள்வி எழுப்பினார்.

சி.பி.ஐ., தரப்பு, ‘நகை திருட்டு புகார் பொய்யானது என தெரிவிக்கவில்லை. நகையை கண்டுபிடிக்க முடியவில்லை என்று தான் தெரிவிக்கப்பட்டது. ஊடகங்கள் தவறாக வெளியிட்டுள்ளனர்’ என விளக்கம் அளித்தது.

நீதிபதி, ‘நகையை அஜித்குமார் திருடினாரா, இல்லையா? இது தான் என் கேள்வி’ என, மீண்டும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு சி.பி.ஐ., தரப்பு, ‘திருட்டில் சம்பந்தப்பட்ட கார், சிசிடிவி காட்சி, 94 சாட்சியங்களிடம் விசாரித்ததில், அஜித்குமார் திருடியதற்கான ஆதாரம் இல்லை’ என தெரிவித்தது.

அஜித்குமார் தாய் மாலதி தரப்பு, ‘போலீஸ் வாகனத்தின் போலி நம்பர் பிளேட்கள், பி.வி.சி., பைப், இரும்பு தடி, மிளகாய் பொடி, ரத்தக்கறை படிந்த மூன்று சாம்பிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அஜித்குமாரை அடிக்க சொன்னது யார் என, டி.எஸ்.பி.,யை காவலில் எடுத்து சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும்’ என கோரிக்கை வைக்கப்பட்டது.

நீதிபதி அதிருப்தி சி.பி.ஐ., தரப்பு, ‘மொபைல் போன்களை தடய அறிவியல் துறை மூலம் ஆய்வு செய்ததில், டி.எஸ்.பி.,யை எந்த உயர் அதிகாரிகளும் தொடர்பு கொள்ளவில்லை’ என தெரிவித்தது.

நீதிபதி, ‘டி.எஸ்.பி.,க்கு உத்தரவிட்ட அதிகாரி யார் என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு, அந்த அதிகாரி காப்பாற்றப்பட்டு வருகிறார் போலும்’ என, தன் அதிருப்தியை பதிவு செய்தார்.

டி.எஸ்.பி., மற்றும் போலீசார் தரப்பு, ‘உயர் அதிகாரிகளின் உத்தரவை மீற முடியவில்லை. அஜித்குமார் குடித்துவிட்டு பணிக்கு வந்துள்ளார்’ என, தெரிவித்தனர்.

நீதிபதி, ‘அஜித்குமார் நடத்தை குறித்து குறை கூறாதீர்கள். உடற்கூராய்வில் அவர் மது அருந்தியதாக குறிப்பிடப்படவில்லை.

‘ பொறுப்புமிக்க டி.எஸ்.பி., பதவியில் இருந்துகொண்டு இவ்வாறு வாக்குவாதம் செய்யாதீர்கள். போலீசார் மனசாட்சியுடன் செயல்பட வேண்டும். ஒருவர் மீது சந்தேகம் வந்தால் அடிப்பீர்களா?

‘உயரதிகாரி ஒருவர் அடிக்க சொல்லி உத்தரவிட்டால் அடித்து கொலை செய்வீர்களா? அடிக்க முடியாது என்று ஒருவர் கூட ஏன் மறுக்கவில்லை.

‘சட்டவிரோதமாக செயல்பட முடியாது என, உயர் அதிகாரியிடம் சொல்லுங்கள். நடவடிக் கை எடுத்தால், நீதிமன்றத்திற்கு வாருங்கள். நீதிமன்றம் உங்களை பாதுகாக்கும்’ என ஆவேசப்பட்டார்.

வழங்க முடியாது

சி.பி .ஐ., தரப்பு, ‘இவ்வழக்கி ல் இரு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. போலீசார் தான் அஜித்குமாரை அடித்து கொலை செய்தனர் என்பதற்கான போதிய ஆதாரங்கள் உள்ளன. எனவே, ஜாமின் வழங்கக் கூடாது’ என வாதிட்டது.

நீதிபதி, ‘போலீசார் செய்தது மன்னிக்க முடியாத குற்றம். இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட யாரையும் விடக்கூடாது.

‘அஜித்குமார் கொலை வழக்கு குறித்து மாவட்ட நீதிமன்றம் ஆறு மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும். நகை திருட்டு பு காரையும் சேர்த்து, சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும். வழக்கு விசாரணை முடியும் வரை யாருக்கும் ஜாமின் வழங்க முடியாது’ எனக்கூறி, மனுக்களை தள்ளுபடி செய்தார்.

Source link