2026 சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிரமாக பரப்புரையில் இறங்கியுள்ளன. இதனிடையே, தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கி இருக்கிறது. விடுமுறை நாட்கள் போக வேட்புமனு தாக்கல் செய்ய 4 நாட்களே இருப்பதால் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதேபோல் பிரச்சாரத்திலும் தீவிரம் காட்டி வருகின்றனர்.
கடந்த 2024 ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் ‘தமிழ் மாநில பகுஜன் சமாஜ்’ என்ற கட்சியை தொடங்கியுள்ளார். அதிமுக- பாஜகவின் என்டிகே கூட்டணியில் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் திருவிக நகரில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட இருக்கிறார்.
இந்நிலையில் அதிமுக கூட்டணியில் திருவிக தொகுதியில் போட்டியிடும் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். தனியார் நிகழ்ச்சியில் நடைபெற்ற காணொளி உரையாடலில் திருமாவளவன் இது குறித்துப் பேசி உள்ளார். ‘அதிமுக கூட்டணியில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கிற்கு பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் திருவிக நகரில் அதிமுக வாய்ப்பு கொடுத்துள்ளது வரவேற்கத்தக்கது. கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் தலைவர்ஆம்ஸ்ட்ராங் அவர்களின் மனைவி தேர்தலில் போட்டியிடுவது நல்ல முடிவுதான். ஆனால் அவருடைய உயிருக்கு ஆபத்து உள்ளது. எனவே திருவிக நகரில் போட்டியிடும் அவருக்கு பாதுகாப்பு தர வேண்டியது போலீசாரின் கடமை” என தெரிவித்துள்ளார்.
