தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி மார்ச் 30 ஆம் தேதி தொடங்கும் வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 6ஆம் தேதியுடன் நிறைவு பெறவுள்ளது. ஏப்ரல் 23ஆம் தேதி பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. தேர்தல் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதன் காரணமாக, மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.
இந்த நடத்தை விதிகள் தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தான் போலீசார் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர். அதோடு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் பணம் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. அதே சமயம் அவசர தேவைக்காகக் கொண்டு செல்லப்படும் பணம் கைப்பற்றப்படுவதாக விமர்சனமும் எழுந்திருந்தது.
இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் பறக்கும் படையினர் சென்னை மதுரவாயல் முதல் அம்பத்தூர் செல்லும் பைபாஸ் சாலையின் சர்வீஸ் சாலையில் தீவிர வாகனத் தணிக்கையில் இன்று (28.03.2026) ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் பண்டல் பண்டலாக பணம் இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 5 கோடி ரொக்கப் பணத்தைத் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், இந்தப் பணம் டாஸ்மாக் கடைகளில் இருந்து வசூல் செய்யப்பட்டு வங்கிக்குக் கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், ரூ. 50 ஆயிரத்திற்கு மேல் கொண்டு செல்ல தேவையான முறையான ஆவணங்கள் மற்றும் ரசீதுகள் இல்லாததால், பறக்கும் படையினர் பணத்தைப் பறிமுதல் செய்து மதுரவாயல் வட்டாட்சியர் அலுவலகத்திற்குக் கொண்டு சென்றனர். அங்கு வருமான வரித்துறை மற்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் முன்னிலையில் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எனவே, உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டால் பணம் திரும்ப ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் வாகன தணிக்கையின் போது உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற 5 கோடி ரூபாய் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
