சென்னை: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி ஆகிய 6 மாவட்டங்களில் நாளை (பிப்ரவரி 21) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்தில் உருவாகக்கூடும்.
தென் தமிழகம் மற்றும் தெற்கு கேரள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மற்றும் தேனி ஆகிய 6 மாவட்டங்களில் நாளை (பிப்ரவரி 21) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் நாளை மறுநாள் (பிப்ரவரி 22 ) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதேபோல், திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
