'உலகை' வெல்ல இந்தியா 'ரெடி': இன்று நியூசி., அணியுடன் பலப்பரீட்சை

ஆமதாபாத்: ‘டி-20’ உலக கோப்பை தொடர் ‘கிளைமேக்சை’ எட்டியுள்ளது. இன்று நடக்கும் பைனலில் இந்தியா வெல்லும் பட்சத்தில், தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைக்கலாம்.

இந்தியா, இலங்கையில் 10வது ‘டி-20’ உலக கோப்பை தொடர் நடக்கிறது. இன்று குஜராத்தின் ஆமதாபாத்தில் நடக்கும் பைனலில் ‘நடப்பு சாம்பியன்’ இந்தியா, நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.


வலுவான ‘பேட்டிங்’

சர்வதேச ‘டி-20’ அரங்கின் ‘நம்பர்-1’ அணியான இந்தியா, அசுர பலத்தில் உள்ளது. நமது ‘பேட்டர்கள்’ அஞ்சாமல் விளாசுவது பலம். துவக்கத்தில் சாம்சன் மிரட்டுகிறார். கடந்த இரு போட்டியில் (97, 89 ரன்) அசத்திய இவர், இன்றும் கை கொடுக்கலாம். ‘நம்பர் -1’ பேட்டரான அபிஷேக் சர்மா தடுமாறுவது பலவீனம். இவரை நீக்க வாய்ப்பு இல்லை.

‘மிடில் ஆர்டரில்’ கேப்டன் சூர்யகுமார் (8 போட்டி, 242 ரன்) ‘சூறாவளியாக’ சுழன்று ஆட வேண்டும். திலக் வர்மா (199 ரன்) எந்த இடத்திலும் களமிறங்கி அதிரடியாக ரன் சேர்க்கிறார். கடைசி கட்ட வாணவேடிக்கைக்கு ‘ஆல்-ரவுண்டர்’ ஹர்திக் பாண்ட்யா (199 ரன்), ஷிவம் துபே (209 ரன்) இருப்பதால், கோப்பை கைப்பற்ற அதிக வாய்ப்பு உள்ளது.

மிரட்டும் பும்ரா

வேகப்பந்துவீச்சில் பும்ரா, அர்ஷ்தீப் மிரட்டுகின்றனர். இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் அசத்திய பும்ரா, மீண்டும் முத்திரை பதிக்கலாம். ‘சுழலில்’ வருண் சக்ரவர்த்தி ரன்னை வாரி வழங்குகிறார். இவருக்கு பதில் குல்தீப் யாதவ்/சிராஜ்/வாஷிங்டன் சுந்தரை சேர்க்க வாய்ப்பு உள்ளது. ‘ஆல்-ரவுண்டர்’ அக்சர் படேல் அணிக்கு பெரும் பலம்.

அச்சுறுத்தும் ஆலன் ‘டி-20’ ரேங்கிங்கில் 4வது இடத்தில் உள்ள நியூசிலாந்து அணியில் ‘ஆல்-ரவுண்டர்கள்’ அதிகம் இருப்பது சாதகம். தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான அரையிறுதியில் ஆலன், 33 பந்தில் 100 ரன் விளாசினார். மறுபக்கம் டிம் செய்பர்ட்டும் துவக்கத்தில் அதிவேகமாக ரன் சேர்க்கிறார்.

இவர்களை இந்திய பவுலர்கள் விரைவில் வெளியேற்ற வேண்டும் ரச்சின் ரவிந்திரா, கிளன் பிலிப்ஸ், சாப்மென், டேரில் மிட்சல், சான்ட்னர் என தரமான பேட்டர்கள் உள்ளனர். ‘வேகத்தில்’ பெர்குசன், மாட் ஹென்றி, ‘ஆல்-ரவுண்டர்’ ஜிம்மி நீஷம் கைகொடுக்கலாம்.’சுழலில்’ தொல்லை கொடுக்க கேப்டன் சான்ட்னர், ரச்சின், கோல் மெக்கோன்ச்சி உள்ளனர்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

துபாயில் 2025, மார்ச் 9ல் நடந்த ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி பைனலில் (50 ஓவர்) ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, நியூசிலாந்தை வீழ்த்தி, கோப்பை வென்றது. இதே போல இம்முறை சூர்யகுமார் சாதிக்க வேண்டும் என்பதே 140 கோடி இந்திய ரசிகர் களின் கனவாக உள்ளது.

Source link