'உலக' அரங்கில் ஆதிக்கம்: மகிழ்ச்சியில் மிதாலி

புதுடில்லி: ”சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது,” என, மிதாலி ராஜ் தெரிவித்தார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் நடந்த ஐ.சி.சி., தொடர்களில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 2024ல் ‘டி-20’ உலக கோப்பை வென்ற ரோகித் சர்மா தலைமையிலான இந்திய ஆண்கள் அணி, கடந்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி (‘மினி’ உலக கோப்பை) கைப்பற்றியது. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய பெண்கள் அணி, முதன்முறையாக உலக கோப்பை (50 ஓவர், 2025) தட்டிச் சென்றது. இளம் இந்திய பெண்கள் அணி (19 வயது) ‘டி-20’ உலக கோப்பை (2025) கைப்பற்றியது. இளம் இந்திய ஆண்கள் அணி (19 வயது) உலக கோப்பை (50 ஓவர், 2026) வென்றது. சமீபத்தில் சொந்த மண்ணில் அசத்திய சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி, தொடர்ந்து 2வது முறையாக ‘டி-20’ உலக கோப்பை வென்று சாதனை படைத்தது.

இதுகுறித்து, பி.சி.சி.ஐ., வாழ்நாள் சாதனையாளர் விருது வென்ற முன்னாள் இந்திய பெண்கள் அணி கேப்டன் மிதாலி ராஜ் கூறியது: உலக கிரிக்கெட் அரங்கில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற எனது நீண்ட நாள் கனவு தற்போது நிறைவேறிவிட்டது. கடந்த 3 ஆண்டுகளில் சீனியர், ஜூனியர் என அனைத்து விதமான உலக கோப்பை தொடர்களிலும் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. முன்னாள் வீராங்கனையாக, இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சியை கண்டு பெருமை கொள்கிறேன். இதேபோல இந்திய பெண்கள் கிரிக்கெட்டிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கு, முன்னாள் பி.சி.சி.ஐ., செயலரும், தற்போதைய ஐ.சி.சி., தலைவருமான ஜெய் ஷாவின் பங்களிப்பு முக்கிய காரணம். நாங்கள் விளையாடிய நாட்களில், சச்சின், டிராவிட் போன்ற ஜாம்பவான்களின் ஆலோசனை சாதிக்க உதவியது.

இவ்வாறு மிதாலி கூறினார்.

Source link