டோருன்: போலந்தில், உலக உள்ளரங்கு தடகள சாம்பியன்ஷிப் 21வது சீசன் நடக்கிறது. ஆண்களுக்கான 60 மீ., ஓட்டத்தின் பைனலில், இலக்கை 6.41 வினாடியில் கடந்த அமெரிக்காவின் ஜோர்டான் அந்தோணி தங்கம் வென்றார். ஜமைக்காவின் கிஷேன் தாம்சன் (6.45 வினாடி), அமெரிக்காவின் டிரேவான் புரோமெல் (6.45 வினாடி) வெள்ளி, வெண்கலம் கைப்பற்றினர்.
பெண்களுக்கான வட்டு எறிதலில் அமெரிக்காவின் சேஸ் ஜாக்சன் (20.14 மீ.,) தங்கத்தை தட்டிச் சென்றார். கனடாவின் சாரா மிட்டன் (19.78 மீ.,), சுவீடனின் ஆக்செலினா ஜோஹன்சன் (19.75 மீ.,) வெள்ளி, வெண்கலம் வென்றனர். இதுவரை 2 தங்கம், ஒரு வெண்கலம் என, 3 பதக்கங்களுடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
சபாஷ் சபலென்கா
மயாமி: அமெரிக்காவில், மயாமி ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் பெலாரசின் அரினா சபலென்கா 7-6, 6-4 என்ற நேர் செட் கணக்கில் அமெரிக்காவின் ஆன் லியை வீழ்த்தினார். மற்றொரு போட்டியில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா 6-3, 6-3 என, சகவீராங்கனை யூலியா புடின்ட்சேவாவை வென்றார். அமெரிக்காவின் கோகோ காப் 3-6, 6-4, 6-4 என இத்தாலியின் எலிசபெட்டாவை தோற்கடித்தார்.
எக்ஸ்டிராஸ்
* இங்கிலாந்து செல்லவுள்ள இந்திய அணி, 5 ‘டி-20’, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் (ஜூலை 1-19) பங்கேற்கிறது. இத்தொடருக்கு முன், அயர்லாந்துக்கு எதிராக 2 போட்டிகள் (ஜூன் 26, 28, இடம்: பெல்பாஸ்ட்) கொண்ட ‘டி-20’ தொடரில் விளையாட உள்ளது.
* பிரான்சில் நடக்கும் ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் தன்வி சர்மா, ஜப்பானின் நோஜோமி ஒகுஹாரா மோதினர். இதில் ஏமாற்றிய தன்வி 9-21, 16-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தார்.
* ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப் நடந்தது. இதில் 28 மாநிலங்களை சேர்ந்த 1460 பேர் பங்கேற்றனர். 39 தங்கம், 31 வெள்ளி, 25 வெண்கலம் என, 95 பதக்கம் கைப்பற்றிய ஹரியானா முதலிடம் பிடித்தது. தமிழகம் 51 பதக்கங்களுடன் (14 தங்கம், 20 வெள்ளி, 17 வெண்கலம்) 2வது இடத்தை தட்டிச் சென்றது. போட்டியை நடத்திய ஒடிசா 9வது இடத்தை (5 தங்கம் உட்பட 17 பதக்கம்) பிடித்தது.
