கோப்பை வென்றது ஆர்சனல்
லண்டன்: ‘பிபா’ சார்பில் பெண்களுக்கான சாம்பியன்ஸ் கோப்பை கிளப் கால்பந்து முதல் சீசன் நடந்தது. லண்டனில் நடந்த பைனலில் ஆர்சனல் (இங்கிலாந்து), கொரிந்தியன்ஸ் (பிரேசில்) அணிகள் மோதின. ஆட்ட நேர முடிவில் போட்டி 2-2 என சமநிலையில் இருந்தது. கூடுதல் நேரத்தில் அசத்திய ஆர்சனல் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
டென்மார்க் அணி கலக்கல்
ஹெர்னிங்: டென்மார்க், நார்வே, சுவீடனில், ஆண்களுக்கான ஐரோப்பிய ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் 17வது சீசன் நடந்தது. பைனலில் ஜெர்மனி, டென்மார்க் அணிகள் மோதின. அபாரமாக ஆடிய டென்மார்க் அணி 34-27 என்ற கணக்கில் வெற்றி பெற்று, 3வது முறையாக (2008, 2012, 2026) சாம்பியன் பட்டம் வென்றது. மூன்றாவது இடத்துக்கான போட்டியில் குரோஷிய அணி 34-33 என, ஐஸ்லாந்தை வென்றது.
எக்ஸ்டிராஸ்
* இந்தியாவுக்கு எதிரான ‘டி-20’ உலக கோப்பை போட்டியை பாகிஸ்தான் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. ஸ்பான்சர், ஒளிபரப்பு நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படும். இப்போட்டிக்கு 10 வினாடிக்கு ரூ. 40 லட்சம் வரை விளம்பரத் தொகை நிர்ணயிக்கப்படும். ஒட்டுமொத்தமாக ரூ. 2,288 கோடி வரை இழப்பு ஏற்படலாம்.
* டில்லியில், பிப். 4-13ல் ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் (‘ரைபிள்”https://www.dinamalar.com/”பிஸ்டல்’) தொடர் நடக்கவுள்ளது. இதில் 20 நாடுகளை சேர்ந்த, 311 பேர் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் 118 பேர் களமிறங்குகின்றனர்.
* நேபாளத்தில், பெண்களுக்கான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் (19 வயது) 7வது சீசன் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் ஏமாற்றிய இந்திய அணி 0-2 என, வங்கதேசத்திடம் தோல்வியடைந்தது. தொடர்ந்து 2வது வெற்றியை பதிவு செய்த வங்கதேசம் பைனலுக்கு முன்னேறியது.
* கர்நாடகாவுக்கு எதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் காலிறுதியில் (பிப். 6-10, மும்பை) விளையாடும் மும்பை அணிக்கு கேப்டன் ஷர்துல் தாகூர், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் தேர்வாகினர்.
* ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில், வரும் மே 22-25ல் தேசிய சீனியர் பெடரேஷன் கோப்பை தடகளம் நடக்கவுள்ளது. இதில் சிறப்பாக செயல்படும் இந்திய நட்சத்திரங்கள், கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுக்கு (2026, ஜூலை 23 – ஆக. 2) தேர்வாகலாம்.
* அசாமில் இன்று நடக்கவுள்ள சந்தோஷ் டிராபி தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் காலிறுதியில் தமிழகம் – பஞ்சாப், மேற்கு வங்கம் – சர்வீசஸ், கேரளா – அசாம், ரயில்வே – ராஜஸ்தான் அணிகள் விளையாடுகின்றன.
* மும்பை ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் வைதேகி சவுத்ரி 2-6, 0-6 என பிரான்சின் லியோலியா ஜீன்ஜீனிடம் தோல்வியடைந்தார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா 4-6, 0-6 என ஜப்பானின் மிசாகி மட்சுடாவிடம் வீழ்ந்தார்.
