புதுடில்லி: ”உலக கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணிக்கு கடுமையான சவால் காத்திருக்கிறது. சாம்பியன் பட்டம் வெல்ல, சிறப்பான முறையில் தயாராக வேண்டும்,” என, பயிற்சியாளர் புல்டன் தெரிவித்தார்.
பெல்ஜியம், நெதர்லாந்தில், வரும் ஆக. 14-30ல் ஆண்களுக்கான உலக கோப்பை ஹாக்கி 16வது சீசன் நடக்க உள்ளது. ‘நடப்பு சாம்பியன்’ ஜெர்மனி, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட 16 அணிகள், 4 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடம் பிடிக்கும் அணிகள், இரு பிரிவுகளாக 2வது சுற்றில் மோதும். இதில், ‘டாப்-2’ இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு (ஆக. 28) முன்னேறும். பைனல், ஆக. 30ல் நடக்கவுள்ளது.
இந்திய அணி ‘டி’ பிரிவில் வேல்ஸ் (ஆக. 15), இங்கிலாந்து (ஆக. 17), பாகிஸ்தான் (ஆக. 19) அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. கடந்த 1975ல் உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா, அதன்பின் 2018ல் காலிறுதி வரை சென்றது. கடந்த முறை (2023) 2வது சுற்றோடு வெளியேறியது.
இந்த ஆண்டு இந்திய அணி பங்கேற்ற 8 போட்டியில், ஒன்றில் மட்டும் வெற்றி பெற்றது. ஏழு போட்டியில் தோல்வியடைந்தது. எனவே உலக கோப்பை வெல்ல இந்திய அணி கடுமையாக போராட வேண்டும்.
இதுகுறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் கிரெய்க் புல்டன் கூறுகையில், ”உலக கோப்பை தொடரில் கடின பிரிவில் இடம் பெற்றுள்ளோம். ஒவ்வொரு அணியும் வலிமையாக உள்ளது. எந்த ஒரு அணியையும் குறைத்து மதிப்பிடாமல் முழுத்திறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே வெற்றி பெற முடியும். கடுமையாக பயிற்சி மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு அணியின் பலம், பலவீனத்திற்கு ஏற்ப திட்டமிடுதல் அவசியம்,” என்றார்.
