வாஷிங்டன்: அமெரிக்கா, சீனா ஆகிய இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் பல்வேறு விவகாரங்களில் உளவு பார்த்து வரும் நிலையில், சி.ஐ.ஏ., எனப்படும், அமெரிக்காவின் உளவு அமைப்பு, சீன ராணுவ அதிகாரிகள் அமெரிக்காவுக்காக தகவல் வழங்கும்படி வெளிப்படையாக அழைப்பு விடுத்துள்ளது.
அமெரிக்கா – சீனா இடையே அதிகார போட்டி நிலவுகிறது. வர்த்தகம், தொழில்நுட்பம், தென் சீன கடல், தைவான் உள்ளிட்ட விவகாரங்களால், இரு நாடுகளுக்கிடையே தொடர்ந்து பதற்றமான நிலை நீடிக்கிறது.
இரு நாடுகளும் ஒரு வரையொருவர் உளவு பார்ப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் சூழலில், அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ., தற்போது புதிய உத்தியை கையில் எடுத்துள்ளது.
சீன ராணுவ அதிகாரிகள் மற்றும் உயர்மட்ட அதிகார வட்டாரங்கள் குறித்து, தன் அதிகாரப்பூர்வ, ‘யு டியூப்’ சேனலில் இரண்டு நிமிட வீடியோவை, சி.ஐ.ஏ., வெளியிட்டுள்ளது.
அதில், சீன கம்யூ. , கட்சி அரசால் பாதிக்கப்பட்ட ராணுவ வீரர், நாட்டின் எதிர்கால நலன் கருதி அமெரிக்காவை தொடர்பு கொள்வது போல் காட்டப்பட்டுள்ளது.
சீ ன மொழியில் தயாரிக்கப்பட்ட அந்த வீடியோவில், அமெரிக்காவுக்கு தகவல் வழங்கும்படி வெளிப் படையாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ரகசிய தொடர்புக்கு, ‘டோர்’ எனப்படும் பாதுகாப்பான இணையதள பிரவுசரை பயன்படுத்தும்படி அறிவுறுத்தி உள்ளனர். அதற்கான வழிமுறைகளும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.
சீன ராணுவத்தில் சமீபத்தில் உயர் அதி காரிகள் பலர் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். இதற்கிடையே இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளதால், இது சீனாவில் ஏற்பட்டுள்ள அதிருப்தியை பயன்படுத்தி, உளவாளிகளை ஈர்க்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. இதற்கு சீன அரசு இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.
