ஊக்கத்தொகை திட்டத்தால் குவிந்த முதலீடு ரூ.9,200 கோடி உணவு பதப்படுத்துதல் துறை குறித்து தகவல்

புதுடில்லி: உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் உணவு பதப்படுத்துதல் துறை நிறுவனங்கள் 9,200 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்திருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.

மத்திய உணவு பதப்படுத்துதல் துறை இணையமைச்சர் ரவ்நீத் சிங் கூறியதாவது:

உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற உணவு பதப்படுத்துதல் துறைக்கு வந்த விண்ணப்பங்களில், 168 விண்ணப்பங்கள் கடந்த டிச., 31ல் அனுமதிக்கப்பட்டன. இந்நிறுவனங்கள் அக்காலகட்டம் வரை மொத்தம் 9,207 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளன.

இத்திட்டத்தின் வாயிலாக, 35 லட்சம் டன் அளவுக்கு பதப்படுத்துதல் மற்றும் சேமிப்பு திறன் உருவாக்கப்பட்டுள்ளது. திட்டத்தின் பயனாளி நிறுவனங்களுக்கு தற்போது வரை 2,714.79 கோடி ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

உலக அளவில் உணவு உற்பத்தி ஜாம்பவான்களை உள்நாட்டில் உருவாக்குவது, இந்திய உணவு பிராண்டுகளை வெளிநாடுகளில் பிரபலப்படுத்துவது, பண்ணை நிலத்துக்கு வெளியேயும் வேளாண் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, விளைபொருட்களுக்கு லாபகரமான விலையை உறுதி செய்வது, விவசாயிகளின் வருவாயை உயர்த்துவது ஆகியவை உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தின் நோக்கங்கள்.

உற்பத்தியில் துவங்கி, பதப்படுத்துதல் வரை எல்லா படி நிலைகளும் இந்தியாவிலேயே நடைபெறுவது தான், இத்திட்டத்தில் பயன் பெறுவதற்கான முக்கிய நிபந்தனை.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link