பத்திரிக்கை துறை சார்ந்த சவால்கள் மற்றும் அதன் எதிர்ப்புகள் சாதக பாதகங்கள் ஆகியவைகளை மையமாக வைத்து திரைப்படங்கள் வெளிவருவது மிகவும் அரிது. எப்போதாவது வெளிவரும் படங்கள் கூட சில நேரங்களில் வெற்றியும் பல நேரங்களில் தோல்வியும் பெறுகின்றன. தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு வெப் சீரிஸ் ஆக அச்சு ஊடகங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து ஒரு திரைப்படம் பிரபல ஓ டி டி தளமான அமேசான் பிரைமில் வெளியாக இருக்கிறது. இது எந்த அளவு வரவேற்பு பெற்று இருக்கிறது?
ரிஷிகாந்த் அப்துல் லீ மௌரிஷ் தாஸ் அஷ்விதா ஆகியோர் சிறு வயது முதலே இணை பிரியா நண்பர்களாக இருக்கின்றனர். இதில் நாயகன் ரிஷிகாந்தின் தாத்தா சின்னி ஜெயந்த் ஒரு காலத்தில் மிகப்பெரிய அச்சு பத்திரிகையாக நடத்திக் கொண்டிருந்த நம்ம செய்தி என்ற பிராந்திய பத்திரிகையை மீண்டும் உயிர் பெற செய்து அதை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என இவர்கள் போராடுகின்றனர். அவர்களை ஒரு வலுவான எதிரி எதிர்க்க அதை இவர்கள் எப்படி சமாளித்தார்கள்? என்பதே இந்த வெப் சீரிஸின் மீதி கதை.
இன்றைய காலகட்டத்தில் அச்சு ஊடகங்கள் எந்த அளவு சவால்களை சமாளித்து தன் இருப்பை நிலை நிறுத்திக் கொள்ள எவ்வளவு போராடுகிறார்கள் என்பது பலரும் அறிந்ததே. குறிப்பாக இப்போது உள்ள சூழலில் பல்வேறு மிகவும் பிரபலமான அச்சு பத்திரிகைகள் தங்களது பத்திரிகைகளுக்கு மூடு விழா நடத்திக் கொண்டும் இருக்கின்றன. இந்த சூழ்நிலையில் அதை மீண்டும் உயிர்பித்து அதன் தரத்தை இக்கால ஜென்சிகளுக்கு உணர்த்த முயற்சி செய்து உருவாகி இருக்கும் இந்த சீரிஸ் அதை நகைச்சுவை கலந்த விறுவிறுப்பான சீரிஸாக கொடுக்க முயற்சி செய்திருக்கிறது. இன்னமும் அச்சு ஊடகங்களை தொழிலாக இல்லாமல் சேவையாக பார்த்து நடத்திக் கொண்டிருக்கும் பல்வேறு உண்மையான ஊடகவியலாளர்களின் தியாகங்களை புரியவைக்கும் படியாக ஒரு கதை அமைப்பை உருவாக்கி அதை நகைச்சுவை கலந்து கூறியிருக்கிறார் இயக்குனர் நவீன் ஜார்ஜ் தாமஸ். ஒரு இணையதொடருக்கு என்றே உரித்தான மேலும் கீழுமாக செல்லும் சில பல வேகத்தடைகள் நிறைந்த திரைக்கதைக்கு மத்தியில் நகைச்சுவைகளை உட்பகுத்தி சில இடங்களில் சிரிப்பும் பல இடங்களில் சோதித்தும் பார்த்து போகப் போக கதைக்குள் சென்று இறுதி கட்டத்தில் விறுவிறுப்பாக சென்று முடித்திருக்கும் சீரிஸ் இந்த லோக்கல் டைம்ஸ். திரைக்கதைக்குள் இன்னமும் கூட பலவிதமான புதுமைகளை புகுத்தி இந்த கால இளசுகளும் ரசிக்கும்படி இன்னமும் சிறப்பான முறையில் கொடுத்திருக்கலாம்.
ரிஷிகாந்த் அப்துல் லீ மௌரிஷ் தாஸ் அஷ்விதா ஆகியோர் நண்பர்களாக அந்த கதாபாத்திரங்களுக்கு என்ன தேவையோ அதை சிறப்பான முறையில் செய்து இருக்கின்றனர். தாத்தாவாக வரும் சின்ன ஜெயந்த் தனது அனுபவம் நடிப்பின் மூலம் கவர்கிறார். மற்றபடி முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கும் பாண்டியராஜன் போலீசாக வரும் ரினி மற்றும் மற்றொரு முக்கிய பாத்திரத்தில் வரும் நந்திதா ஸ்ரீகுமார் உட்பட பலர் அவரவர் வேலையை நிறைவாக செய்து விட்டு சென்று இருக்கின்றனர்.
ரிபு ஷர்மா, கபிலன் விநாயக், ஜஸ்வந்த் மாஹே, ஜென்ஷன் ராஜ் ஆகியோரின் ஒளிப்பதிவில் காட்சிகளும் அதை எடுத்த விதமும் நேர்த்தியாக படம் பிடிக்கப்பட்டுள்ளன. நகைச்சுவை காட்சிகளுக்கு ஏற்ப சிறப்பான முறையில் ஒளிப்பதிவு செய்து இருக்கின்றனர். எம் எஸ் யஷ்வந்த் இசையில் பாடல்களை காட்டிலும் பின்னணி இசை சிறப்பு.
ஏழு பாகங்களாக கொண்டு உருவாகி இருக்கும் இந்த இணைய தொடர் முழுக்க முழுக்க அச்சு ஊடகத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது. அக்கால பத்திரிகையை இக்காலத்திற்கு ஏற்ப நவீன ஊடகமாக மாற்ற முயற்சி செய்யும் நண்பர்களுக்கிடையே நடக்கும் கலகலப்பான கதை அம்சத்துடன் கூடிய இந்த சீரிசை இன்னும் இன்னமும் இக்காலத்திற்கு ஏற்ற ட்ரெண்டில் விறுவிறுப்பான திரை கதையுடன் கூடிய காட்சி அமைப்புகளுடன் அமைத்திருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.
லோக்கல் டைம்ஸ் – நண்பர்கள் அட்ராசிட்டி!
