சென்னை: ஊடகங்களை, தி.மு.க., அரசு அடக்கி ஒடுக்க நினைப்பதாக அ.தி.மு.க., குற்றஞ்சாட்டி உள்ளது.
அ.தி.மு.க., அறிக்கை:
தமிழகத்தில் நடப்பது மக்களாட்சியா அல்லது மன்னராட்சியா, ஜனநாயகமா அல்லது சர்வாதிகாரமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஊடகம் என்பது மக்களின் குரல். அதை ஒடுக்க நினைப்பது மக்களாட்சி தத்துவத்திற்கே எதிரான செயல்.
ஊடக சுதந்திரத்தில் தலையிட்டு, அரசு அதிகாரிகளை ஏவி, மிரட்டலும் அழுத்தமும் கொடுக்கும் தி.மு.க., அரசின் அராஜகப் போக்கு, அவர்களின் நிர்வாகத் தோல்வியையே வெளிப்படுத்துகிறது.
ஒரு செய்தியை எவ்வாறு, எவ்வளவு நேரம் வெளியிட வேண்டும் என்பதை தீர்மானிப்பது, ஊடக ஆசிரியர்களின் தொழில்முறை உரிமை. அதில் தலையிடுவது சர்வாதிகார மனநிலை.
ஆட்சி மாற்றமும், அ.தி.மு.க., ஆட்சியும் வருவதற்கு வெகு நாட்கள் இல்லை என்பதை, தி.மு.க., அரசுக்கு ஏவல் செய்யும் அதிகாரிகள் மறந்துவிட வேண்டாம்.
கரூரில் செய்தியாளர் மீது, ஒரு எம்.எல்.ஏ.,வே நடத்திய தாக்குதல், தி.மு.க., அரசின் ஊடக விரோத முகத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. இது, செய்தியாளர் மீது நடந்த தாக்குதல் அல்ல; மக்களின் தகவல் அறியும் உரிமை மீது நடத்தப்பட்ட தாக்குதல்.
ஊடகங்களை அடக்கி ஒடுக்கலாம் என்ற எண்ணத்தை, முதல்வர் ஸ்டாலின் கைவிட வேண்டும். நடுநிலையோடு செய்தி வெளியிடும் ஊடகங்களுக்கும், ஊடகவியலாளர் களுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டால், பாதுகாப்பு அரணாக அ.தி.மு.க., துணை நிற்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
