மதுரா: ஊடுருவல்காரர்களை அடையாளம் கண்டு மக்கள் உரிய அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறியுள்ளார்.
உ.பி. மாநிலம் விருந்தாவனில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், ஜீவன் தீப் ஆசிரமம் திறப்பு விழாவில் கலந்து கொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;
இந்தியாவில் சட்ட விரோதமாக குடியேறும் ஊடுருவல்காரர்களை அடையாளம் கண்டு மக்கள் உரிய அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும். ஊடுருவி உள்ள வெளிநாட்டினரை கண்டறிந்து, அவர்களுக்கு வேலை கிடைக்காமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில், அவர்களை மக்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
அதே நேரத்தில் நம் நாட்டில் உள்ள நம் மக்களிடம் நாம் பாகுபாடு பார்க்கக்கூடாது. ஒரு நல்ல குடும்ப ஆரோக்கியத்திற்கு மருத்துவர்கள் மூன்று குழந்தைகளை பெற்றுக் கொள்ளலாம் என்று பரிந்தரைக்கின்றனர். 3க்கும் குறைவான கருவுறுதல் விகிதம் நீண்ட அபாயங்களை ஏற்படுத்துவதாக மக்கள் தொகை ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
குறைந்த பிறப்பு விகிதம் கொண்டுள்ள நாடுகள், தங்கள் மக்கள்தொகையை அதிகரிக்க தீவிரமாக முயன்று வருகின்றன. நம் நாட்டின் மக்கள்தொகை கொள்கையை நாம் மறு பரிசீலனை செய்ய வேண்டும். சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படலாம் என்ற அதே தருணத்தில் மக்களின் புரிதல் மிகவும் முக்கியமானது.
மனிதாபிமான அணுகுமுறையின் கீழ், 2 குழந்தைகளுக்கு பதில் 3 குழந்தைகளை பெற்றுக் கொள்ள இங்குள்ள குடும்பங்கள் இலக்கு வைக்க வேண்டும். சமூக நலன்களுக்கு இது இன்றியமையாதது.
மதமாற்றங்களை தடுக்க அரசு சட்டம் இயற்றலாம். ஆனால் இந்த சமூகம் இதை தானாக முன் வந்து நிநுத்த வேண்டும். மதம் மாறியவர்களில் பலர் மீண்டும் மாற விரும்பலாம். விருப்பம் கொண்டவர்கள் வரவேற்கப்பட வேண்டும்.
அமெரிக்கா மனது மாறி, இந்தியாவின் பொருளாதார மாதிரி தான் சிறந்தது, அனைவரும் அதை பின்பற்ற வேண்டும் என்று கூறலாம். சீனாவும் அதேபோல கூறலாம், இருப்பினும் இந்தியாவின் அணுகுமுறை, என்பது மற்றவர்கள் மீது திணிப்பது அல்ல, அனைவர் கண்ணோட்டமும் சரியானது என்பதை நம்புகிறது.
ஆசிரமம் என்ற சொல், இந்திய கலாசாரத்திற்கு உரிய தனித்துவமான ஒன்று. வேறு எந்த மொழியிலும் இதற்கு உண்டான மொழி பெயர்ப்பு இல்லை. ஆசிரமம் என்பது ஒரு வாழ்க்கை அறிவை போதிக்கும் பள்ளி. இங்கு ஒழுக்கத்துடன் கல்வி பயில்பவர்கள், சமூகத்திற்கு திறம்பட சேவையாற்ற முடியும்.
பின்லாந்து நாட்டின் புகழ்பெற்ற கல்விமுறை கூட குருகுலம், ஆசிரம அணுகுமுறையை பிரதிபலிப்பதாக உள்ளது. வெறும் வயிற்றை நிரப்புவதற்கு அல்லாமல் இங்கே உண்மையான அறிவு பெறப்படுகிறது.
இவ்வாறு மோகன் பாகவத் பேசினார்.
