ஊடுருவல் தேர்தல் விவகாரம் அல்ல; தேசிய பிரச்னை: பிரதமர் மோடி

குவஹாத்தி: வடகிழக்கு மாநிலமான அசாமில், மொத்தமுள்ள 126 சட்டசபை தொகுதிகளுக்கு வரும், ஏப்., 9ல் தேர்தல் நடக்கிறது. இங்கு ஆளும் பா.ஜ.,வுக்கும், காங்., கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலம் பா.ஜ., பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி நேற்று பேசியதாவது: அசாமில் ஊடுருவல்காரர்கள் எங்கெல்லாம் புகுந்தனரோ அங்கெல்லாம் சிறுதொழில்களை கைப்பற்றி விட்டனர். உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை பறித்து விட்டனர். எனவே, சட்ட விரோத நில ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட உள்ளூர் மக்களுக்கு தேவையான உதவிகளை பா.ஜ., தொண்டர்கள் வழங்க வேண்டும்.

மாநிலத்திற்குள் ஊடுருவல்காரர்களை அனுமதித்தது காங்., தான் என்பதை வாக்காளர்களுக்கு புரிய வைக்க வேண்டும். உள்ளூர் மக்களின் உரிமைக்காக பா.ஜ., குரல் கொடுக்கிறது என்பதையும் எடுத்துரைக்க வேண்டும். ஊடுருவல் என்பது வெறும் தேர்தல் விவகாரம் அல்ல; அதையும் தாண்டி தேசத்தின் பாதுகாப்பு தொடர்புடையது. இவ்வாறு அவர் பேசினார்.

Source link