ஊட்டி: அருகருகே மர்மமான முறையில் இறந்து கிடந்த 2 சிறுத்தைகள்; தீவிர விசாரணையில் வனத்துறை

குந்தா வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் அருகருகே இரண்டு சிறுத்தைகள் பரிதாபமாக உயிரிழந்து கிடந்த நிகழ்வு சூழலியல் ஆர்வலர்களைக் கவலையடையச் செய்திருக்கிறது.

உயிரிழந்த சிறுத்தை

சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரியில் வனவிலங்குகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது.

வனவிலங்குகளின் இயற்கைக்கு மாறான இறப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக வனத்தை ஒட்டிய தனியார் தேயிலைத் தோட்டங்களில் புலி, சிறுத்தை போன்ற உயிரினங்கள் மர்மமான முறையில் இறந்து வருகின்றன.

உயிரிழந்த சிறுத்தை
உயிரிழந்த சிறுத்தை

இந்த நிலையில், ஊட்டி அருகில் உள்ள மஞ்சக்கொம்பை பகுதியில் சிறுத்தை ஒன்று அசைவற்றுக் கிடப்பதாக வனத்துறையினருக்கு உள்ளூர் மக்கள் நேற்று காலை தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்தப் பகுதிக்கு வனத்துறையினர் குழுவாகச் சென்று ஆய்வு மேற்கொண்டதில் இரண்டு சிறுத்தைகள் அந்தப் பகுதியில் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உடனடியாக உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் இரண்டு சிறுத்தைகளின் உடல்களையும் கூறாய்வு செய்து அதே இடத்தில் வைத்து தீயிட்டு எரித்துள்ளனர்.

இந்தத் துயரம் குறித்து தெரிவித்த வனத்துறையினர், “குந்தா வனச்சரகத்திற்கு உட்பட்ட மஞ்சக்கொம்பை பகுதியில் உள்ள ஒரு தனியார் இடத்தில் சுமார் 2 வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை மற்றும் 6 வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தை என இரண்டு சிறுத்தைகள் அருகருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தன.

உயிரிழந்த சிறுத்தை
உயிரிழந்த சிறுத்தை

இதைப் பார்த்த உள்ளூர் மக்கள் எங்களுக்குத் தகவல் தெரிவித்தனர். இந்த இரண்டு சிறுத்தைகளும் விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என மக்கள் கூறினர். அது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம்.

அதேவேளையில் சிறுத்தைகளை செந்நாய்கள் தாக்கியதற்கான அடையாளங்களையும் காண முடிகின்றன. அந்தக் கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறோம். உடற்கூறாய்வு முடிவுகளின் அடிப்படையில் உண்மை தெரியவரும்” என்றனர்.

Source link