ஊட்டி: நீலகிரி எம்.பி., ராஜா, அந்த ஆடியோவில் பேசியது முற்றிலும் உண்மை. அரசியல் தெரிந்த அனைவருக்கும் அது தெரியும்

ஊட்டி: நீலகிரி எம்.பி., ராஜா, அந்த ஆடியோவில் பேசியது முற்றிலும் உண்மை. அரசியல் தெரிந்த அனைவருக்கும் அது தெரியும் என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

ஊட்டியில் நிருபர்களிடம் அண்ணாமலை கூறியதாவது:

நமது கூட்டணி ஒற்றுமையாக ஒரு அணியில் நிற்கிறோம். தமிழக வெற்றிக்கழகம் மறறும் சீமான் களத்தில் இருக்கின்றனர். ஆனால் போட்டி என்றால், இருமுனை போட்டியாக தான் இருக்கிறது. ஒன்று ஆளும் திமுக, மற்றொன்று இதற்கு முன் ஆட்சியில் இருந்து மறுபடியும் ஆட்சிக்கு வர போகிற அதிமுக தலைமையிலான தேஜ கூட்டணி.

முதல்வர் ஸ்டாலின் தவறான நோக்கத்தில் பேசுகிறார். உதராணத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் ஒன்று சொன்னார். அதனை கனிமொழி திரித்து, நாங்கள் எல்லாம் எங்களை யாராவது எதிர்த்து பேசினால், மலர்வளையம் வைக்கும் குடும்பம் என்று சொல்கிறார். இது எல்லாம் மிரட்டல் இல்லையா?

இபிஎஸ் சொல்லும் கருத்தை கருத்தாக பேசுங்கள், அதற்காக மலர்வளையம் வைப்போம் என்றால் என்ன அர்த்தம். பேச்சில் ஒரு முறை இருக்க வேண்டும். இபிஎஸ் பற்றி உதயநிதி பேசுவது தரக்குறைவான, ஆபாசமான பேச்சு தான். அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. முதல்வர் ஸ்டாலின் இதையெல்லாம் மாற்றி, சொல்கிறார். யாரும் யாரையும் எதையும் செய்ய முடியாது, எதுவும் செய்ய போவதும் இல்லை.

தமிழகத்தில் 5 ஆண்டுகளில் என்ன மாற்றத்தை கொண்டு வந்தேன் என்பது பற்றி தான் முதல்வர் ஸ்டாலின் பேச வேண்டும். அதை விட்டு மண்ணில் புதைக்கிறார்கள், அங்கு புதைக்கிறார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நட்சத்திர பேச்சாளராக இருக்கும் ராஜா இதுவரை திமுக கூட்டத்தில் ஒன்றில் கூட பங்கேற்கவில்லை.

நீலகிரி எம்.பி., ராஜா ஆடியோ வெளியிட்ட பிறகு அதை திமுக தலைவர்கள் மறுத்து இருந்தாலும் கூட, அது ராஜா பேசிய ஆடியோ தான். அந்த ஆடியோவில் பேசியது முற்றிலும் உண்மை. அரசியல் தெரிந்த அனைவருக்கும் அது தெரியும். இந்த தொகுதியின் எம்பியாக இருந்தாலும் கூட ராஜாவை பிரசாரத்திற்கு கூட வர முடியாமல் முடக்கி வைத்து இருக்கிறார்கள்.

ராஜா பேசிய கருத்தை தமிழக மக்கள் எல்லோரும் இன்று தெரிந்து கொண்டார்கள். அவர் முதல்வரின் திறனை பற்றி சொல்லி இருக்கிறார். நாங்கள் தொடர்ந்து சொல்வதை திமுகவின் மூத்த தலைவரே ஊர்ஜிதம் செய்து இருப்பது இந்த தேர்தல் நேரத்தில், இன்னும் எங்கள் பிரசாரத்திற்கு வலு சேர்த்து இருக்கிறது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

Source link