ஏப்ரல் 23ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று (28-03-26) தேர்தல் பிரச்சாரம் நடத்தினார்.
அதில் அவர், “இந்த ஆட்சியில் கலெக்ஷன், கமிஷன், கரப்ஷன் இது தான் நாள்தோறும் நடக்கிறது. கழிப்பறைக்கு கட்டண வசூல் நடத்தி அதில் கொள்ளை அடிக்கின்ற ஒரே கட்சி திமுக மட்டும் தான். கேவலம் கழிப்பறை, அதை கூட விட்டு வைக்கவில்லை. அப்படிப்பட்ட கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமா? இந்தியாவில் பல மாநிலம் இருக்கிறது. எந்த அரசாங்கமும் ஊழலுக்காக கலைக்கப்படவில்லை. ஆனால் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசாங்கம் திமுக தான். ஊழலில் ஊற்றுக்கண் திமுக, ஊழல் என்றால் திமுக தான் நியாபகம் வரும். அப்படிப்பட்ட ஊழல் நிறைந்த கட்சி மீண்டும் தமிழகத்தில் ஆள வேண்டுமா?
திமுக கட்சிக்கு தலைவர் ஆக வேண்டும் என்ற நோக்கத்தோடு உதயநிதியை அறிமுகம் செய்து சட்டமன்ற உறுப்பினர் ஆக்கினார். அதன் பின்னர் அமைச்சர் ஆக்கினார், இப்போது துணை முதலமைச்சர் ஆக்கிருக்கிறார். திமுக கட்சிக்கு மாநில இளைஞரணி செயலாளர் ஆக்கிருக்கிறார். அந்த கட்சியில் இளைஞரே இல்லையா? திமுக குடும்பத்தைச் சேர்ந்தவர் தான் இளைஞரா? ஸ்டாலின் அந்த கட்சியினுடைய தலைவர், உதயநிதி அந்த கட்சியினுடைய மாநிலச் செயலாளர், கனிமொழி துணை பொதுச் செயலாளர். இப்படி குடும்பத்தில் இருக்கிறவர்கள் தான் அதிகாரத்தில் இருக்க வேண்டும், ஆட்சியிலும் இருக்க வேண்டும், கட்சியிலும் உயர்ந்த பதவியில் இருக்க வேண்டும். அதிமுக அப்படி அல்ல, ஜனநாயகம் உள்ள ஒரு கட்சி. திமுகவில் எவ்வளவுதான் பாடுபட்டு உழைத்தாலும் அவர்களுக்கு அங்கீகாரம் கிடையாது. அதிமுகவை பொறுத்தவரைக்கும் அப்படி அல்ல. சட்டமன்றத்தில் எனக்கு பின்னாலும் அதிமுக இருக்கும் என்று ஜெயலலிதா சொன்னார். அவர் மறைந்த பிறகு இந்த கட்சி உடைந்துவிடும், இந்த கட்சியை முடக்கிவிடலாம், வழக்கு போட்டு தடுத்துவிடலாம் என்று சிலர் பி டீமை வைத்து எவ்வளவோ முயற்சி செய்தார்கள்.
இங்கு இருக்கின்ற மக்கள் துணையோடு, கழக உடன் பிறப்புகள் நிர்வாகிகளோடு அவ்வளவையும் தூள் தூளாக உடைத்து நொறுக்கப்பட்டது. உட்கட்சியில் பிரச்சனையை தூண்டிவிட்டு இப்போது அந்த கட்சிக்கு போயிருக்கிறார். உண்மையான முகம் வெளிவந்துவிட்டது, பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. நான் அப்போதே சொன்னேன் பல பேர் நம்பவில்லை. இந்த இயக்கத்தை கைபற்ற முயற்சி செய்தார்கள். அத்தனையும் உங்கள் துணை கொண்டு அதையெல்லாம் தடுத்து நிறுத்திருக்கிறோம். தமிழ்நாட்டுக்கு நடக்கிற சட்டமன்றத் தேர்தல் தான் இது. ஆனால் இது கூட முதல்வருக்கு தெரியவில்லை. சாதாரண மக்களுக்கு கிடைக்கின்ற அந்த உண்மை செய்தி நாட்டை ஆளுகின்ற முதலமைச்சருக்கு கிடைகாதது வேதனை அளிக்கிறது” என்று பேசினார்.
