சென்னை: ஊழல் கஜானாவை நிரப்ப அப்பாவி மக்களின் உயிர்களை அடமானம் வைக்க திமுக துடிப்பதாக தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டி உள்ளார்.
இதுகுறித்து அவரது அறிக்கை; அரசுப் பேருந்தா? அல்லது எமனின் பாசக்கயிறா? சேலம் அருகே அரியானூர் என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பஸ், தடுப்பைத் தாண்டி சரக்கு வாகனத்தில் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்ததுடன் மேலும் சிலர் படுகாயமடைந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைக் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்வதோடு, காயமடைந்தவர்கள் முழு மன மற்றும் உடல் நலத்துடன் விரைவில் குணமடைய இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.
ஆளும் திமுக அரசின் நிர்வாகக் குளறுபடிகளால் தமிழகப் போக்குவரத்துத் துறையும் அதன் கீழ் இயங்கும் அரசுப் பஸ்களும் முற்றிலுமாகப் பழுதாகிக் கிடப்பதை நாம் பலமுறை ஆதாரங்களுடன் எடுத்துக் கூறியுள்ளோம். மழைக்கும், காற்றுக்கும், வெயிலுக்கும், சிறு மேடு பள்ளங்களுக்கும் தாங்காத தகர டப்பாக்களை எல்லாம் “விடியல் பஸ்” என்ற பெயரில் ஒட்டுப் போட்டு ஓட்டிக் கொண்டிருக்கும் திமுக அரசின் அலட்சியத்திற்கு ஏழை எளிய மக்கள் பலியாக வேண்டுமா?
தங்கள் ஊழல் கஜானாவை எப்படியாவது நிரப்பிட வேண்டும் என்ற ஒரே நோக்கில் அப்பாவிப் பொது மக்களின் உயிர்களை அடமானம் வைக்கத் துடிக்கும் திமுக போன்ற ஒரு தீயசக்தியைத் தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள், இனி அரியணையில் ஏறவும் அனுமதிக்க மாட்டார்கள்.
இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார்.
