தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி மார்ச் 30 ஆம் தேதி தொடங்கும் வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 6ஆம் தேதியுடன் நிறைவு பெறவுள்ளது. ஏப்ரல் 23ஆம் தேதி பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. பிரதான கட்சிகளான திமுக, அதிமுக வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக- பாஜகவின் ஏன்டிஏ கூட்டணியில் திண்டுக்கல் மாவட்டம் பழனி தொகுதியில் அதிமுக போட்டியிடும் நிலையில் பாஜகவுக்கு அந்த தொகுதியை ஒதுக்கக்கோரி அங்கு வந்திருந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை முற்றுகையிட்டு பாஜகவினர் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உலக அமைதி வேண்டி நடத்தப்பட்ட யாக நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அங்கு வந்திருந்த எல்.முருகன் காரை முன்னாள் தமிழக பாஜக தலைவரின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டனர். பழனியில் கடந்த ஒரு வருடமாகவே பாஜகவினர் களப்பணியாற்றி வருகிறோம். ஆனால் இந்த தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்காமல் அதிமுகவுக்கு ஒதுக்கி உள்ளீர்கள். எங்களால் வேலை செய்ய முடியாது. எனவே நீங்கள் பாஜக தலைமைக்கு வலியுறுத்தி இந்த தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்க வேண்டும்’ என கோஷம் எழுப்பினர். பேச்சுவார்த்தை நடத்திய எல்.முருகன் தலைமையிடம் சொல்வதாக தெரிவித்துவிட்டு அங்கிருந்து சென்றார்.
