மதுரவாயலில் வரும் 27ஆம் தேதி முக்கியமான போராட்டத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதன்மூலம் அடுத்தடுத்து மக்கள் நலப் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் காய் நகர்த்தவுள்ளது கவனிக்கத்தக்கது.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுக்கு பின்னர், அதிமுக தொடர்ந்து கரைந்து கொண்டிருக்கிறது. இக்கட்சிக்கு இனிமேல் எதிர்காலம் இல்லை எனக் கருதி பலர் தவெகவில் இணைந்து வருகின்றனர். அதேசமயம் கட்சியை தன்னால் வழிநடத்த முடியும் என்பதில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதியாக நிற்கிறார். விஜய் என்ற புதிய சக்தி அரசியல் களத்திற்கு வந்துள்ள நிலையில், அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அடுத்து ஆட்சி மாற்றம் வந்தால் கூட திமுகவிற்கு தான் வாய்ப்புள்ளது என்றும், அதிமுக மீண்டு வருவது சிரமம் என்று விமர்சிக்கின்றனர்.
உட்கட்சி பூசலில் தவிக்கும் அதிமுக
மேலும் எதிர்க்கட்சியாக திமுகவின் செயல்பாடுகளை யாராலும் தொடக் கூட முடியாது எனக் கடந்த கால வரலாறுகளையும் சுட்டிக் காட்டுகின்றனர். தேர்தல் முடிவுகள் வெளியாகி 2 மாதங்களை கடந்துவிட்ட நிலையில் அதிமுகவின் செயல்பாடுகள் எதுவும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. தங்களின் உட்கட்சி பிரச்சினைகளை சரிசெய்யவே அதிகப்படியான நேரத்தை செலவிட்டு வருகின்றனர். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி உட்கட்சி பிரச்சினையை சற்று ஓரமாக தூக்கி வைத்துவிட்டு, மக்கள் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் தர முடிவு செய்துள்ளார்.
வெளியேறும் முக்கிய நிர்வாகிகள்…என்ன செய்யப்போகிறார் எடப்பாடி?
மதுரவாயல் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு
தனது முதல் நகர்வாக ஜூலை 27ஆம் தேதி அன்று மதுரவாயல் தொகுதிக்கு உட்பட்ட நெற்குன்றம் பல்லவன் நகரில் திமுக அரசு தொடங்கி வைத்து, தற்போது வரை செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று தவெக அரசை வலியுறுத்தும் வகையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை திருவள்ளூர் மத்திய மாவட்ட கழகம் செய்துள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.கோகுல இந்திரா தலைமையும், திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளர் கே.எஸ்.ரவிச்சந்திரன் முன்னிலையும் வகிக்கின்றனர்.
திமுகவும் சரியில்லை, தவெகவும் சரியில்லை
இதில் ஹைலைட்டான விஷயம் என்பது ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்று சொல்வது போல, மதுரவாயல் ஆர்ப்பாட்டத்தின் மூலம் இரண்டு கட்சிகளையும் அதிமுக எதிர்க்கிறது. திமுக ஆட்சியில் இந்த கடை மூடப்படும் என உறுதி அளித்தும் மூடவில்லை. மக்களுக்கு இடையூறாக இருக்கும் இடங்களில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றிவிட்டதாக கூறும் தவெக அரசு, நெற்குன்றம் பல்லவன் நகரில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றாதது ஏன்? இவ்வாறு இரண்டு கட்சிகளுக்கு கண்டனம் தெரிவித்து எடப்பாடி பழனிசாமி வியூகத்தை கட்டமைத்துள்ளார்.
தவெகவிற்கு தாவிய முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்
திருவள்ளூர் மத்திய மாவட்டத்தை பொறுத்தவரை முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் கட்டுப்பாட்டில் அதிமுக இருந்தது. இவர் தான் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்தார். மிகவும் செல்வாக்கு பெற்ற நபராக பார்க்கப்பட்ட இவர், சமீபத்தில் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். எனவே இந்தப் பகுதியில் அதிமுக இனிமேல் அவ்வளவு தான் என விமர்சனங்கள் எழுந்தன. இதை பொய்யாக்கும் வகையில் கட்சி தலைமை கண்டன ஆர்ப்பாட்டத்தை கையில் எடுத்துள்ளது. பெஞ்சமின் இல்லாத சூழலிலும் தங்களால் கூட்டத்தை கூட்ட முடியும் என நிரூபிக்கும் வேலையில் இறங்கியுள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி அரசியல் வியூகம்
தொடர் தோல்விகளால் கட்சி துவண்டு போயிருக்கிறது. கட்சியின் தலைமை பொறுப்பில் இருந்து விலகவோ, மாற்று சிந்தனைக்கு முன்வரவோ எடப்பாடி பழனிசாமி மறுக்கிறார். இவரால் தான் கட்சி இந்த நிலையை அடைந்திருக்கிறது. இனியும் இவர் பேச்சை கேட்க வாய்ப்பில்லை என்றெல்லாம் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இவை அனைத்தையும் தவிடுபொடியாக்கி அதிமுக என்றால் இரட்டை இலையும், எடப்பாடி பழனிசாமியும் தான். இவரது பேச்சிற்கு கட்சியினர் கட்டுப்படும் நிலையில் இன்னும் இருக்கின்றனர் என்பதை நிரூபிக்க தயாராகி வருகின்றனர். ஒருபுறம் திமுக தான் தங்களின் எதிரி என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்துவதற்கும், கட்சியில் இருந்து வெளியேறியவர்களால் அதிமுக துவண்டு விடாது என்பதை நிரூபிக்கவும் இது ஒரு வாய்ப்பாக இருக்கக்கூடும்.
Source link
