தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஏப்ரல் 23ஆம் தேதி பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இந்த தேர்தலை எதிர்கொள்ள திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, நாதக, தவெக உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில், அண்மையில் திமுகவில் இணைந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முதல்வரின் உத்தரவுப்படி தென் தமிழகத்தில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், அவர் இன்று (25-03-26) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “இதுவரை பழனிசாமி சொல்லிருக்கின்ற கருத்துக்கள் எதுவுமே நன்பகத்தன்மை இல்லாததாக தான் இருக்கிறது. அவர் ஆளுமைமிக்க அரசியல் தலைவர் இல்லை. 2017 ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இருந்து நடந்து முடிந்த 2024 நாடாளுமன்றத் தேர்தல் வரை 10 தேர்தல்களில் அவர் தோல்வியை தழுவி இருக்கிறார். ஒரு ஆளுமைமிக்க தலைவர் என்றால் ஒரு சட்டமன்றத் தேர்தல் அல்லது நாடாளுமன்றத் தேர்தலிலோ தோல்வியை தழுவினால் அடுத்து எந்த தேர்தல் வந்தாலும் அந்த கட்சியை தூக்கி நிலைநிறுத்தி வெற்றி பெறுவது தான் ஆளுமைமிக்க தலைவராக தமிழக அரசியலில் இருக்கின்ற ஒரு நிலைப்பாடு.
அது எடப்பாடி பழனிசாமி இல்லை. ஆகவே அவர் ஆளுமைமிக்க தலைவராக இல்லை என்ற காரணத்தினால் தொடர்ந்து 10 அனைத்து தேர்தல்களிலும் பழனிசாமி, படுதோல்வி பழனிசாமியாகத்தான் அரசியல் நிலை கொண்டிருக்கிறார். பழனிசாமி வெளியிட்டிருக்கின்ற தேர்தல் அறிக்கை பொய்யான அறிக்கை. கடந்த காலங்களில் பழனிசாமி சொன்ன எதையாவது நிறைவேற்றி இருக்கிறாரா? மக்கள் அதை நம்ப வேண்டாம்” என்று தெரிவித்தார்.
